சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும்! ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் ராகுல் கபாலி!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில், ” இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இந்த படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக இருக்கும். அதை கேட்டு நடிக்கும்போது சற்று பதட்டமும் இருக்கும். இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் நடிக்க முடியுமா..! என தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. இதை கவனித்த இயக்குநர் உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சகோதரரை போல கொண்டாடினார்கள்.‌ இந்தப் படத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தை பார்த்து.. எப்படி இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்திருக்கிறேன். ‘மின்னல் முரளி’ படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து, நம்மால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரைப் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் ” என்றார்.

நடிகை சாய் பிரியங்கா ரூத் பேசுகையில், ” ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் ‘பயமறியா பிரம்மை’ எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தின் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தை பற்றியும் முதல் நாள் விரிவாக விவரித்தார்கள். அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடித்துவிட்டு வந்து விட்டேன். ஆனால் பட குழுவினர் அனைவரும் பெருந்தன்மையுடன் பழகினர். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ” என்றார்.

இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும் .. இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை. குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வு ரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள். இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம்.. எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்… ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.