ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர்.
.
இந்த நிகழ்வில்,
நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,” இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் திலீபன் பேசுகையில், ” படத்தின் திரைக்கதையை வாசிக்குமாறு இயக்குநர் தமிழ் கேட்டுக்கொண்டார். படித்தவுடன் வியந்தேன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த விசயத்தில் கட்சி தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு… பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு… போன்ற பயங்கரமான அரசியல் பின்னணி உண்டு. இதனை அடிப்படையாக வைத்து வாழ்வியலை படமாக எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு அனைவரும் பேசப்படுவார்கள்.
நடிகர் விஜய்குமார் உடன் பணியாற்றுவது எளிதானது அவர் இயக்குநராகவும் இருப்பதால்.. இந்தக் காட்சியில் இதை செய்தால் போதும் என்று எப்போதும் குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டே இருப்பார். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். ” என்றார்.
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசியதாவது, ”
‘ ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது.
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி தான். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது முந்தைய திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில், ” புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன். இந்த சினிமா உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி!