People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
நடிகர் மகேந்திரன் பேசியதாவது…
நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…
இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…
2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.