கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது ! ‘J.பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு!

 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’
ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.

அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் பானு, நடிகை மெலடி, வசனகர்த்தா தமிழ் பிரபா, படத்தின் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், காஸ்ட்யூம் டிஸைனர் ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குநர் ராமு தங்கராஜ், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின், பொம்மை நாயகி படத்தின் இயக்குநர் ஷான், நடிகர் அரவிந்த் ஆகாஷ், நடிகர் யாத்திசை சேயோன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில்,

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது,

”ரஞ்சித் என்னிடம் சென்னை 28-ல கூட இருந்தார். அந்த டீம்லதான் இந்த படத்தோட சுரேஷ் மாரியும் இருந்தார். ரஞ்சித் அதுக்கு முன்னாடியே சில படங்கள்ல அசிஸ்டண்டா ஒர்க் பண்ணினாலும் நாங்கள்லாம் டீமா, குடும்பமா சேர்ந்து ஒர்க் பண்ண படம்னா அது சென்னை 28-தான். அடுத்து அவர் அட்டகத்தி படம் இயக்க போனப்போ நான் மங்காத்தா பண்ணிட்டிருந்தேன். அட்டகத்தி முடிச்சுட்டு அந்த படத்துக்கு ஒரு ஷோ ஏற்பாடு பண்ணோம். தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் சார் வந்து படத்தை அவ்ளோ என்ஜாய் பண்ணி பார்த்தார். அவர் அப்படி ரசிச்சதுதான், அந்த படத்தை ஞானவேல் ராஜா வாங்கி ரிலீஸ் பண்றதுக்கு முக்கிய காரணமா இருந்துச்சு. அந்த காலகட்டத்திலேருந்தே ரஞ்சித்தோட வளர்ச்சியை, அவர் டீமோட வளர்ச்சியை நான் பாத்துக்கிட்டிருக்கேன். அப்போ ஆரம்பிச்சு இப்போவரை நாங்க எல்லாரும் குடும்பமாத்தான் இருக்கோம். எங்க டீம்ல இருந்து ஒவ்வொருத்தரும் படம் இயக்கி வெற்றியடையறதை பார்க்கிறேன். அதுல பெருமையும் சந்தோஷமும் எனக்குத்தான் அதிகம். சுரேஷ் மாரியை பா.இரஞ்சித் அறிமுகப்படுத்துறது இன்னும் சந்தோஷமா இருக்கு.

இந்த ஜெ பேபி படத்தை நான் இன்னும் பார்க்கலை. என் வீட்ல பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணிருக்காங்க. இப்போ மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை எல்லோரும் கொண்டாடிக்கிட்டிருக்காங்க. நம்ம தமிழ்நாட்ல அந்த படத்தை கொண்டாடுறதை பார்க்கிறப்போ கலைக்கு மொழி முக்கியமில்லை, கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது.
அதே மாதிரியான படம்தான் இது. ஆனா, இதை ரொம்ப நாள் முன்னாடியே எடுத்துட்டாங்க. ஊர்வசி மேடத்தை வெச்சு ஒரு படம்கிறப்போ அதுவே ஸ்பெஷல்தான். அவங்க அவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட்; அவ்ளோ பெரிய என்டர்டெயினர். நாம எல்லாருமே அவங்க ஃபேன்தான். படம் கண்டிப்பா ஃபன் ரைடாதான் இருக்கும். படத்துல நடிச்சிருக்கிற எல்லாருக்கும், டெக்னிசியன் எல்லாருக்கும் வாழ்த்துகள். நல்ல படங்களை எடுக்குற ரஞ்சித்துக்கு நன்றியும் வாழ்த்தையும் சொல்லிக்கிறேன். இது எங்க குடும்பத்திலேருந்து வர்ற மற்றுமொரு படம். எல்லாரும் ஆதரவு தரணும்னு கேட்டுக்கிறேன்” என்றார்.
நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” - ஊர்வசியின் 'J.பேபி' ட்ரெய்லர் எப்படி? | urvasi  starrer J.Baby movie official trailer released - hindutamil.in
இயக்குநர் சுரேஷ் மாரி பேசியதாவது,

‘நான் விஷ்ணு வர்தன் சார்கிட்ட அப்பரண்டிஸா சேர்ந்து, அந்த படம் ரிலீஸான பிறகு நடிகர் அரவிந்த் ஆகாஷ் மூலமா வெங்கட் பிரபு சாரை பார்க்க முடிஞ்சுது. அப்படித்தான் நான் அந்த கூட்டத்துல, குடும்பத்துல சேர்ந்தேன். அதுலேருந்து மங்காத்தா, சரோஜா, பிரியாணினு பல படங்கள்ல அவரோட டிராவல் பண்ணேன். நான் பொறுமையானவன்னு சொல்றாங்க. அந்த பொறுமை வெங்கட் பிரபுகிட்டேயிருந்து கத்துக்கிட்டது.
அடுத்து ரஞ்சித்கூட இணைஞ்சேன். ரஞ்சித்கூட கபாலில ஒர்க் பண்றப்போதான் கவனிச்சேன். அவர்கிட்டே இருந்தவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஒருத்தர் கம்யூனிஸ்ட், ஒருத்தர் பெமினிஸ்ட், ஒருத்தர் சோஷியலிஸ்ட். நான் என்ன ரகம்னு புரியாமலே இருந்தேன். அப்படியெல்லாம் இருந்துதான் இப்போ தனியா படம் இயக்கிருக்கேன். அதுவும் அவரோட தயாரிப்புல.
இந்த கதை என் குடும்பத்துலேருந்து, பெரியம்மாவோட வாழ்க்கையிலயிருந்து எடுத்த கதை. அம்மாங்கிறவங்க எவ்ளோ முக்கியம்கிறதை நிறையப் பேரு புரிஞ்சுக்காம ஓடிக்கிட்டேயிருக்கோம். அவங்களுக்கெல்லாம் அம்மாங்கிற உயிரோட மதிப்பை, அவங்கள எப்படி மதிக்கணும்கிறதை இந்த படம் புரிய வைக்கும்.

இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது,

”எங்க வெங்கட் பிரபு சார் வந்தது ரொம்ப மகிழ்ச்சி. அட்டகத்தி படத்துக்கு பெரிய ஆதரவு கொடுத்தவர். அவர் சுரேஷ் மாரியண்ணா பட நிகழ்ச்சிக்கு வரணும்னு நினைச்சேன். அது நடந்துச்சு.
நான் முதன் முதலா தகப்பன்சாமின்னு ஒரு படத்துல அசிஸ்டண்டா ஒர்க் பண்ணேன். அது ஒரு அனுபவமா இருந்துச்சு. அடுத்து சென்னை 28-ல ஒர்க் பண்றப்போ அதுவரை எது சினிமான்னு நினைச்சுக்கிட்டிருந்தேனோ அதை அப்படியே மாத்துற மாதிரியான அனுபவத்தை அந்த படம் தந்துச்சு. மக்கள் இதைத்தான் ரசிப்பாங்க; அதைத்தான் ரசிப்பாங்கன்னு ஒரு கருத்தை வெச்சிக்கிட்டு இருந்த சூழல்ல வித்தியாசமான கதைக்களத்துல உருவாகி வெற்றி பெற்ற படமா அது இருந்துச்சு. ஜாலியாவும் அமைதியாவும் ஒரு படத்தை எடுக்க முடியும்னு அந்த படம் கத்துக் கொடுத்துச்சு.
நாங்கள்லாம் சின்ன வயசுல சினிமாவுக்குள்ள வந்துட்டோம். சுரேஷ் மாரியண்ணா உள்ளே வர்றப்போவே அவருக்கு கல்யாணமாகி குழந்தை இருந்துச்சு. கல்யாணமாகி வந்தா சினிமாவுல சக்ஸஸ் பண்ண முடியாதுங்கிற சூழல் இங்கே உண்டு. அதையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கார்.

அவரோட குடும்பம் பெரிய குடும்பம். அந்த குடும்பத்துல எல்லாருக்கும் சினிமா பத்தி தெரியும். சினிமா பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுவாங்க. ஒரு படத்துக்கு மக்கள்கிட்டே எப்படியான வரவேற்பு கிடைக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா அவங்க குடும்பத்துக்கு போட்டுக் காட்டினா போதும். படத்தோட ரிசல்ட் பத்தி தெளிவா சொல்லிடுவாங்க.
அவங்க அம்மாவும் சரி, அவங்க மனைவியும் சரி. அவ்ளோ அன்பானவங்க. பெருசா இலை போட்டு கறியெல்லாம் சமைச்சுப் போட்டு அன்பால திணறடிப்பாங்க. அவரோட பிள்ளைகளும் அப்படித்தான் அன்பா பழகுவாங்க. உறவுகள் எல்லாருமா அன்பா சேர்ந்திருக்கிற குடும்பம் அவரோடது. நான் என் கூட பிறந்தவங்ககூட அவ்ளோ நெருக்கமாவெல்லாம் கலந்து பழக மாட்டேன். ஆனா சுரேஷ் அண்ணா குடும்பத்துல அவங்க அண்ணன் தம்பியெல்லாம் அவ்ளோ பாசமா இருக்காங்க. அதுவும் சென்னை கே கே நகர்ல. எனக்கு அதெல்லாம் ஆச்சரியமா இருக்கும். ஜெ பேபியும் அதே மாதிரியான எதார்த்தமான எளிமையான படைப்பா வந்திருக்கு. நல்ல படங்களை கொடுத்தா மக்கள் கண்டிப்பா ரசிப்பாங்க. இதையும் கண்டிப்பா வரவேற்பாங்க. படத்துல நடிச்சிருக்கிற நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டோட உழைச்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்!” என்றார்.