பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில்
நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!”
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “இந்தப் படத்தில் முதலில் நான் சந்தித்தது இயக்குநர் கார்த்திக் யோகியைதான். படத்தின் கதையை அவர் சொன்னபோது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் நல்ல காமெடி எண்டர்டெயினர் படமாக இது இருக்கும். சந்தானத்தை பாடகாராக முதலில் பயன்படுத்திய இசையமைப்பாளர் நான் என்பது எனக்குப் பெருமை. அவருக்குப் பாட வரவில்லை என்றாலும் முயற்சி செய்து அதை சிறப்பாகவும் செய்துள்ளார். நான் சந்தானம் சார் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் இன்னும் சிறப்பாக எல்லோருக்கும் பிடித்தவிதமாக வந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் நல்ல மனிதர். பெரிய பட்ஜெட்டில் நல்ல படமாக சவால்களைக் கடந்து கொண்டு வந்துள்ளார். படம் வெற்றிப் பெறும்”.
நடிகை மேகா ஆகாஷ், “எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சாருக்கும் கிரியேட்டிவ் புரொடியூசர் நட்டி சாருக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது என் பாட்டி இறந்ததால் எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. அதை எல்லாம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். நிறைய நடிகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் எனக்கு ‘கயல்’ என்ற வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நன்றி. சந்தானம் சாருடைய நடிப்புக் குறித்து நான் தனியாக சொல்லத் தேவையில்லை. சிறந்த நடிகர் அவர். பிப்ரவரி 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
நடிகர் ஆர்யா, “’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்
இயக்குநர் கார்த்திக் யோகி, “’டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்கக் காரணம். இதன் பட்ஜெட் ரொம்பவே பெருசு. தயாரிப்பாளர் விஸ்வா கதைக் கேட்டதும் பிடித்துப் போய் சம்மதித்தார். எனக்கு சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ’டிக்கிலோனா’ படத்திற்கு சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன். அந்த அளவுக்கு அவர் என் மேல் அன்பு வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.