‘இறுகப்பற்று’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! படக்குழுவினர் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்!

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், படக்குழு சார்பில் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்வில்

நடிகர் விதார்த் பேசியதாவது,
“ஒவ்வொரு படத்துக்கும் அதன் தயாரிப்பாளர் நம்ம படம் வெற்றியடைந்துவிட்டது என சொல்வார்கள் என எதிர்பார்ப்பேன். அது நடக்கவில்லை. நல்ல படமாக இருக்குமே தவிர வெகுஜன மக்களிடம் போய் சேர்ந்திருக்காது. ஆனால் இந்த பட தயாரிப்பாளர் படம் வெற்றி என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல ஒரு ஆவல் 13 ஆண்டுகளாக இருந்தது. அது தற்போது நிறைவேறியிருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நடிகை அபர்ணதி பேசியதாவது,
“எனக்கு என்ன பேச வேண்டும் என தெரியவில்லை. இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்களிடம் இருந்து எந்த ஒரு குறையும் வரவில்லை. ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு பிளாஷ்பேக் இருக்குற மாதிரி, எனக்கும் இருக்கு. இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன ‘கிழிக்க’ போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி ‘கிழித்து’ போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்திருக்கான். இப்படி ஒரு தருணத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நான் அழுதது எல்லாம் நிஜமானது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஷூட் பண்ணாங்க. என்னை போட்டு சாகடிக்கிறாரேன்னு நினைச்சேன். நான் படங்கள் பண்ணிருக்கேன். நல்ல நடிக்கிறேன் என பெயர் வாங்கிருக்கேன். சினிமாவில் வந்து இப்பதான் வெற்றியையே பார்க்கிறேன்” என நெகிழ்வுடன் தெரிவித்தார்

Rajasekar on X: "Pics from #Irugapatru thanks giving meet https://t.co/sYK4ntRFKZ" / X

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது,

“இறுகப்பற்று படம் ரிலீஸான அக்டோபர் 6ஆம் தேதி தான் என் மனைவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்காக இதை டெடிகேட் பண்ணுவதாக கூறினேன். டெடிக்கேட்டும் பண்ணிவிட்டேன். அப்போது என்னிடம், நீங்களும் கிட்டத்தட்ட படத்தில் பார்த்த கதாபாத்திரம் போல தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தபோது படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களுடனும் என்னை தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. எந்த ஒரு படமும் ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.. அல்லது நம்மை முழுதாக பொழுதுபோக்கு உணர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்.. எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடுபடுகிறோம். சில படங்கள் தான் மக்களிடம் சேருகின்றன. எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள வீடுகளில் என்னுடைய தாத்தா படம் இருக்கும். இறுகப்பற்று படமும் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. சில படங்களை ரசிகர்களுக்கு சரியாக கொடுக்காததற்காக அவர்களிடம் பலமுறை வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அந்த வருத்தம் தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது” என்றார்