சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது ஒரு மனிதனாகவும் பில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது பயணம் தடைக்கற்களைத் தாண்டி வந்த கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது மற்றும் தடைகளை எதிர்த்துப் போராடுவது, அதன் மூலம் கிடைத்த நிலையான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கனவுகளை நிறைவேற்றுவது என அவரின் வெற்றி பல நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. தற்போது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய ’800’ மூலம் அவரது இன்ஸ்பையரிங்கான வாழ்க்கை கதை படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் பகிர்ந்து கொண்டதாவது, “இது எனது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டம். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதை விட, இளைய தலைமுறையினருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிக்கொணரும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை உருவாக்கியதற்காக மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் படத்தை வழங்கும் ஸ்ரீதேவி மூவிஸ் கிருஷ்ண பிரசாத் சிவலெங்கா ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தனை தடைகளையும் மீறி படக்குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த மதுர் மிட்டலுக்கு நன்றி. ‘800’ திரைப்படம் உங்களுக்கு இனிமையான, ஊக்கமளிக்கும் அனுபவத்தைத் தரும்” என்றார்.