ஜெயம் ரவியின் ‘ இறைவன்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ! விஜய்சேதுபதி மற்றும் எச் வினோத் கலந்து கொண்டனர்!

 

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் இறைவன். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,

இயக்குநர் அகமது, “நிகழ்விற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ‘மனிதன்’ படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ரவியுடன் இதற்கு முன்பு ‘ஜனகனமண’ ஆரம்பித்தோம். ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. அதனால்தான் ‘இறைவன்’ படமே வந்துள்ளது. இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். எனக்கே இந்தக் கதை சவாலாகதான் இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நயன்தாராவுக்கு இந்தக் கதையை 4 நிமிடங்கள்தான் ஃபோனில் சொன்னேன். உடனே சம்மதம் சொன்னார். அவருக்கு நன்றி. யுவனும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக்கு வந்துள்ள விஜய் சேதுபதி சாருக்கும் நன்றி. இயக்குநர் வினோத்தின் படங்களுக்கு நான் ரசிகன். ‘இறைவன்’ படத்திற்கு உங்களுக்கு ஆதரவு கொடுங்கள்”.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,

“அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். ‘எம். குமரன்’ படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். ‘இறைவன்’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது ,

“இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது. கோவிட் காரணமாக ‘ஜனகனமண’ நின்றது. அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வந்ததற்கு நன்றி.

வினோத் சாரின் படங்கள் இண்டஸ்ட்ரியை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அகமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும். விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் ‘தனி ஒருவன்2’ பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். ‘இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ” என்றார்.