விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளனர். டைம் டிராவல் ஜானரில் காமெடியாக எடுத்து இருக்கும் மார்க் ஆண்டனி படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை ரூ.70 கோடி வரை வசூலாகி உள்ளதால் பாக்ஸ் ஆபிசில் ரூ, 100 கோடியை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் படக்குழு சார்பில் சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது,
“மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அஜித் சார் தான் காரணம். நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் சாரை பார்க்கும் போது அதிக நம்பிக்கை கொடுத்தார். உன்னால் முடியும், பெரிய படம் பண்ணு என எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தவர் அஜித் சார் தான். எஸ்.ஜே. சூர்யா சாரால் படம் பயங்கர எனர்ஜியாக இருந்தது. காலை 6 மணிக்கு ஷூட்டிங் தொடங்கும், ஷூட்டிங் மாலை 6 மணி வரை நடைபெறும். ஆனாலும் ஃபுல் எனர்ஜியோட சூர்யா சார் இருப்பார். சார் இது ஏன் அப்படி, இதுக்கு அப்பறம் இது ஏன் இப்படி இருக்கு என கேள்வி கேட்டு கொண்டிருப்பார். படத்தில் சில்க் மேம் லுக்கை திரையில் கொண்டுவர மிக சவாலாக இருந்தது. சிறியதாக தப்பு நடந்தாலும் எல்லாமே தவறாக போயிடும். விஷ்ணு பிரியாவின் நடிப்புக்கும் மேலே, சில்க் மேம் லுக் சரியாக வர சிஜி வேலைக்கு மிகுந்த சிரமப்பட்டோம்.
நானும் விஷாலும் அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தோம். நான் விஷால் அண்ணாவிடம் இரவு 1.30 மணிக்கு கதை சொன்னேன். உடனே கதை நன்றாக இருக்கிறது என்ற விஷால் உடனே அடுத்தக்கட்ட செயலில் ஈடுபட்டார். தயாரிப்பாளர் வினோத் சாரும் கதை கேட்டு நல்லா இருக்கு என்றார். இதனால் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை எண்ணி எனக்கு பயம் தான் அதிகம் ஆனது. எந்த பின்புலமும் இல்லாத எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தவர்களுக்கு மிகுந்த நன்றி” என்றார்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது,
“வசூல், பாராட்டுகள், நல்ல விமர்சனங்களை எல்லாம் தாண்டி இப்படம் ‘எல்லோரையும் கவலைகளை மறந்து மனசு விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறது’ என்பதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஷால் சார் உங்களிடம் ஒரு வேண்டுகோள். நாம் இருவரும் சேர்ந்து இனி இரண்டு படங்கள் பண்ணலாம், இல்லை 20 படங்கள்கூட பண்ணலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் இருக்க வேண்டும். பலரும் பேசும் அவதூறான பேச்சுகளால் நம்முடைய இந்த உணர்வும், உறவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்று உங்களிடம் அன்புடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய ஸ்கீரின் ஸ்பேஸ் தந்த உங்களின் பரந்த அன்பான மனதைப் பார்க்கும் போது ‘இவன்தான்டா ஹீரோ…’ என்று சொல்லத் தோன்றுகிறது” என்று கூறினார்.
நடிகர் விஷால் பேசியதாவது,
“ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படம் இதுதான். அடிக்கடி சூர்யா சாரிடம் நான் இதை சொல்வேன். ஆதிக்கோடு படம் செய்யப்போகிறேன் என்ற செய்தி வெளியானதும் பலரும் எனக்கு ஃபோன் செய்து ஏன் சார் ரிஸ்க் எடுக்குறீங்க. வேறு யாரின் இயக்கத்திலாவது நடிக்கலாமே என்றனர். ஆனால் நான் அவர்களிடம், எனக்கு கதை மீதும் அந்த தம்பி மீதும் நம்பிக்கை இருக்கிறது என்றேன். அப்போது பேசியவர்கள் இப்போது ஃபோன் செய்து படம் சூப்பராக இருக்கிறது என்று கூறுகின்றனர். இவ்வளவுதான் உலகம். அவர் முதல் படமாக த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தை இயக்கினார். அந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸானது. அதேநாளில் என் படமான பாயும்புலி ரிலீஸானது. அந்தப் படம் அட்டர் ஃப்ளாப். அப்போது ஆதிக் என்னை காலி செய்துவிட்டான். அடுத்ததாக இன்னொரு விநாயகர் சதுர்த்திக்கு மத கஜ ராஜாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால் சில பிரச்னைகளால் இன்றுவரை அந்தப் படம் ரிலீஸாகவில்லை.
இப்போது இந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகி ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆக தம்பி உனக்கான விநாயகர் சதுர்த்தி 2023ஆம் ஆண்டுதான் என்று விநாயகர் அப்போதே எனக்கு உணர்த்தியிருக்கிறார் போல. விநாயகர், நான், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் என நான்கு பேச்சிலர்கள் இணைந்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று கொடுத்திருக்கிறோம்” என்றார்.