ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ படக் குழு !

 

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் மகேந்திர பிரபு பேசுகையில்,

” இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஒரு அழகான கதையை நேர்த்தியாக சொல்லி எங்களை அசத்தினார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு.. ரசிகர்கள் இதனை துல்லியமாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டது காரணம் என நம்புகிறேன், நன்றி.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்,

” இந்த அடியே திரைப்படத்திற்கு தொடக்க நிலையிலிருந்து ஊடகங்கள் பேராதரவு அளித்து வருகிறது. அதற்கு முதலில் நன்றி. செந்தாழினி – என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். அதில் நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம் தான் என நம்பினேன்.

ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்’ என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்பு கற்பனையும், காட்சி கற்பனையும் தான் அடியே. அவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்றி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

படத்தின் நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,

” முதலில் ஊடகத்தினருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சியை திரையிட்ட பிறகு நேர் நிலையான விமர்சனங்கள் வெளியாகி, சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடாக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘அடியே’ திரைப்படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குநரைத்தான் சாரும். இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” முதலில் வித்தியாசமான ஒரு கதையை சொல்கிறோம் என்றால்.. அதை படமாக்க துணிச்சல் வேண்டும். திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என ஏராளமான சென்டர்கள் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நாம் சொல்லும் விசயம் புரிய வேண்டும். சிலருக்கு கதை புரியாமல் போய்விடுமோ..? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்பாளருக்கும், இந்த கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கலாம் என்று தீர்மானித்ததற்கும் முதலில் நன்றி.

இந்தத் திரைப்படம் ரசிகர்களால் சரியான வகையில் புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால்.. இனி நாமும் வழக்கமான சினிமாவை இயக்கலாம் என தீர்மானித்திருப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் நன்றாக அனுபவித்து உற்சாகமாக கொண்டாடினர். இதை பார்த்த பிறகு தான்.. இனி தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து உருவாகும் திரைப்படமும் வித்தியாசமான கதைக்களம் தான்.” என்றார்.