சீரியல் ஒன்றில் இந்த கால திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சித்துப் பேசியதால் மக்களிடையே ட்ரெண்டானவர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார்.
பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய் படம் மூலம் இயக்குநர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார். ஊழல் போலீஸாக அந்த கேரக்டரில் மாரிமுத்து அதகளம் செய்யவே, அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. நிமிர்ந்து நில், கொம்பன் தொடங்கி சமீபத்தில் ரிலீஸான விக்ரம் வரையில் குணச்சித்திர நடிகராக கோலிவுட்டில் தனித்த அடையாளம் பதித்துவிட்டார் மாரிமுத்து.
தொடர்ந்து கமல்,விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களிலும் நடித்த மாரிமுத்து சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இந்த சீரியலில் அவரது கேரக்டர் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் இப்போது மாரிமுத்து இல்லாமல் இந்த சீரியல் இல்லை என்னும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். அதிலும் ‘எதிர் நீச்சல்’ தொடரில் அவரின் ‘ஏ… இந்தாம்மா’ என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது. அந்த வகையில், மாரிமுத்து திடீரென டிரெண்டானார். சமீபத்தில், ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இன்று (08-09-23) காலை 9 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவ உதவி கிடைக்கும் முன்னரே அவர் உயிர் இழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது’