பல வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் வில்லனாக நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

இந்த நிகழ்வில்

நடிகர் சத்யராஜ் பேசியதாவது,

“இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி என்னிடம் கதையை சொல்வதற்கு முன்பாகவே இந்த படத்தில் நான் ஹீரோ.. நீங்கள் வில்லன்.. ஓகேவா என்றார். இதற்கு முன்னர் இயக்குனர் ராஜமவுலி பாகுபலி படத்திற்காக என்னிடம் பேசியபோது இதேபோலத்தான் கேட்டார். அங்காரகன் முழுக்கதையும் அவர் கூறியபோது கதையும் பிடித்திருந்தது எனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு இருந்தது.லவ் டுடே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது கூட ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் இப்போதெல்லாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. தவிர வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என் தாயார் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நான் இந்த விழாவிற்கு வந்துவிட்டேனே என்கிறார்கள். அதற்கு காரணம் எனது அம்மா தான். எங்களது சொந்த பந்தத்தில் 16 நாள் காரியங்கள் முடியாமல் வெளியில் வரக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் நான் பெரியாரிஸ்ட் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன்பே என் தாயார் என் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து, அவர் இறந்து விட்டால் நான் ஒரே மகன் என்பதால் எந்த சடங்குகளையும் செய்யச் சொல்லி நிர்பந்திக்க கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். அப்படி அவர் கூறியதால் தான் என்று இந்த மேடையில் வந்து நிற்க முடிகிறது. நான் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வரும்போதே எனக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன்.

Sathyaraj as terrorizing police officer in Angaaragan Sathyaraj making his  comeback as a villain with Angaaragan? – Full On Cinema

நல்ல அப்பாவாக தொடர்ந்து நடித்து வருவது போரடிக்கிறது. அதிலும் ஏதாவது வில்லங்கமாக இருந்தால் நடிக்க தயார். அதேபோல நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இதே போல நடிப்பேன் என சொல்ல முடியாது. வில்லனின் கைகளை இயக்குநர் கட்டிப்போடாமல் இருக்க வேண்டும். ஹீரோக்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் சினிமாவிற்கு நுழைந்த காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகியோரின் ஆதரவு இருந்தது. அப்படி இருந்தால் வில்லனாக நடிப்பது ஒரு சுகமான அனுபவம். இயக்குனர் மணிவண்ணனை போல என்னை மனதில் வைத்து எனக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் இப்போது இல்லை.. காரணம். அவர் சித்தாந்த ரீதியாக எனக்கு ஒரு குருநாதரும் கூட

கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல். ஆனால் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் என்று கூறினார்.