ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கும் ஜென்டில்மேன்-ll படத்தின் பூஜை ! தயாரிப்பாளர் குஞ்சுமோன் விளக்கேற்றி துவங்கி வைத்தார்!

 

மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமான வெற்றியை அடைந்த ஜென்டில்மேன் படத்தில் தலைப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது,

“இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் இந்த ஜென்டில்மேன் 2 படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்த வந்திருக்கின்றனர். இந்த படத்தின் பணிகளை கொரோனாவுக்கு முன்பே ஆரம்பித்தோம். நானும் இயக்குனர் செந்தமிழனும் இந்த படத்திற்கான கதையை உருவாக்கினோம். எப்போதுமே கதைக்கு ஏற்ற மாதிரியான ஆட்களை தான் தேர்வு செய்வேன். அதில் நான் பிடிவாதக்காரன். ஒவ்வொரு நபருமே ஜென்டில்மேன் ஆக இருந்து விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது. அதைத்தான் இந்த கதை சொல்கிறது.. இந்த படத்திற்காக நான் அட்வான்ஸ் கொடுத்தபோது கீரவாணி, வைரமுத்து இருவருமே அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள், என்னுடைய குருவாக இருந்த ஜீவி ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பிரச்சனைக்கு அது தீர்வு அல்ல.. எனக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இங்கே அனைவரும் வந்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமானை வைத்து நான்கு படங்களை எடுத்துள்ளேன். இயக்குனர் ஷங்கரை வைத்து படம் பண்ணியுள்ளேன். 100 படங்களுக்கு மேல் விநியோகஸ்தராக பணியாற்றி தான், தயாரிப்பாளர் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளேன். அதனால் எந்த படம் எப்படி ஓடும் என்கிற பல்ஸ் எனக்கு தெரியும். எப்போதுமே படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நஷ்டம் வராத மாதிரி தான் படம் எடுக்க வேண்டும். ஹீரோ ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ந்து வருகின்ற இளம் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படம் எடுப்பதுதான் எனது பாணி. அப்படித்தான் ஷங்கர், ஏ.ஆர் ரகுமான், கதிர் ஆகியோர் உருவானார்கள்.

இப்படத்தை துவங்குவதற்கான காரணம் என்று சொன்னால் அது இசையமைப்பாளர் கீரவாணி தான். இப்படத்தில் பணியாற்ற வேண்டுமென இசையமைப்பாளர் கீரவாணியிடம் நேரில் சென்று பேசியபோது அவர் படத்தின் கதை, கதாநாயகன், இயக்குனர் யாரென்று எல்லாம் கேட்கவில்லை. குஞ்சுமோன் சாருக்காக இந்த படம் பண்ணுகிறேன் என்றார். இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடல் வரிகளை படமாக்க வேண்டும் என்றால் ஐநா சபையை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றால் கிட்டதட்ட எட்டு கோடியாவது அந்த பாடலுக்கு செலவு பண்ண வேண்டும்” என்றார்..

இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது,

“தமிழ்நாட்டுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை இங்கே சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். ஆனால் திடீரென பணி மாற்றம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே பிறந்தேன். அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன். 22 வருடமாக சென்னையில் தான் இருந்தேன். அதன்பிறகு தெலுங்கு படங்களுக்கு எல்லாம் அங்கே தான் பணியாற்ற வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இருந்ததால் தொழில் நிமித்தம் காரணமாக ஹைதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் என்னை தமிழுக்கு அழைத்து வந்த குஞ்சுமோன் சாருக்கு நன்றி. குஞ்சுமோனை பார்க்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி தோரணை இருக்கும். அப்படி ஒரு போலீஸ் அதிகாரி ‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’ என சொல்வது போல என்னை அவர் அரெஸ்ட் பண்ணி விட்டார். அவரது இதயச்சிறையில் ஒரு கைதியாக நான் எப்போதும் இருப்பேன். எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும். இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. அப்படி நான் பூஜிக்கும் பாடல்களை எழுதிய பாடலாசிரியரே மீண்டும் என் படத்திற்கு பாடல் எழுதுவதை ஒரு ஆசிர்வாதமாக நினைக்கிறேன். நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்” என்றார்.

இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.