நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வு நீலாங்கரையில் இன்று நடைபெற்றது,
இந்த நிகழ்வில்
நடிகர் விஜய் பேசுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே, தற்போது பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன். இங்கு இருக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை பார்க்கும் போது எனது பள்ளி நினைவுகள் நினைவுக்கு வருகிறது. நான் படிக்கும்போது ரொம்ப சுமார்தான். நான் ஒரு திரைப்படத்தில் பார்த்தேன், அந்த வசனம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது. நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் அவர்களால் எடுக்க முடியாது. அடுத்ததாக நீங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்த உங்களது ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நண்பர்களுக்கும், அதன் தலைவர் ஆனந்த் அண்ணனுக்கும் நன்றிகள். தற்போது ஃப்ரீயாக கிடைப்பது அட்வைஸ் மட்டும் தான். அதனை உங்களுக்கு நான் கூற விருப்பப்படுகிறேன்
முழுமையான கல்வி என்பது ஐன்ஸ்டீன் சொன்னது போல நாம் படித்த படிப்பு எல்லாம் மறந்த பிறகு நாம் நினைவில் எது இருக்கிறதோ அதுதான் நாம் படித்த கல்வி என கூறினார். அது சில காலம் கழித்து தான் எனக்கு புரிந்தது. உங்களது கல்வி என்பது உங்களது பண்பு மற்றும் சிந்திக்கும் திறனை சார்ந்தது. உங்கள் பணம் இழந்தால் ஒன்றுமே நீங்கள் இழக்கவில்லை. உடல் நலம் இழந்தால் ஏதோ ஒன்றை இழந்து உள்ளீர்கள். ஆனால் உங்களுடைய குணத்தை இழந்தால் அனைத்தும் இழந்து விட்டீர்கள் என்றே அர்த்தம். தற்போது 12வது முடித்து அடுத்து கல்லூரி படிப்பை தொடர உள்ளீர்கள். இப்போது ஹாஸ்டல், கல்லூரி, புது புது நண்பர்கள் என உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பண்பை, குணத்தை இழந்து விடாதீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். அதேபோல் நமது வாழ்க்கை நம் கையில் தான் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
தற்போது சமூக வலைதளத்தில் போலி செய்திகள்தான் அதிகமாக வருகிறது. அப்படி போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான். அந்த செய்தி கவர்ச்சிகரமாக இருந்தாலே போதும். அதில் எதை எடுக்க வேண்டுமா, எதனை நம்ப வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான்.
நான் சமீப காலமாகத்தான் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன். தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு பிடித்துள்ளது. நீங்களும் அதே போல் கல்வியை தாண்டி மற்ற தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெரியாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முன்பு ஒரு பழமொழி உண்டு உங்கள் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்று. ஆனால் தற்போது நீங்கள் எந்த சமூக வலைதள பக்கத்தை பின்பற்றுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள் உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நாளைய இளம் வாக்காளர்களே, நீங்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தான் இருக்கிறது. நீங்கள் வாக்களிப்பீர்கள் அப்போது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது கையை வைத்து நம் கண்ணையே குத்தும் நிலை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் நான் குறிப்பிடுகிறேன். ஒருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு தொகுதிக்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படி என்றால் அந்த 15 கோடியை அவர்கள் முன்னாடியே சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். இனி காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் என்று உங்கள் அம்மா அப்பாவிடம் சொல்லுங்கள்.
உங்கள் வீட்டருகே உங்கள் பகுதியில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி தேர்ச்சி பெற்றீர்கள் படிப்பை சொல்லிக் கொடுத்து அவர்களை தேர்ச்சி பெற வைத்தால் அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. என பேசிவிட்டு இறுதியாக, உங்களை மட்டம் தட்ட ஒரு குரூப் இங்கே இருக்கும். அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள் என தனது நடிகர் விஜய், மக்கள் இயக்க கல்வி விருது விழாவில் பேசி முடித்தார்.