மலையாளத்தில் வெளியான படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியிடுகின்றனர்!

ஊர்வசி, கலையரசன் மற்றும் குரு சோமசுந்தரம் இணைந்து நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் வெளியாகிறது

அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. வி. சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார். ஜுன் 16 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது ,

 

இந்த நிகழ்வில்

நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில்,

” நடிகை ஊர்வசியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு.‌ இயக்குநர் கதை சொன்னவுடன் உடனே மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டேன். இருப்பினும் கலையரசன் கதாபாத்திரம் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. பிறகு ஊர்வசியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக சம்மதம் தெரிவித்தேன். படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. மலையாளத்தில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் டாக்டர் அஜித் ஜாய். மிக தனித்துவமானவர். அவர்தான் புதிய திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து அடையாளப்படுத்தியவர். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் பேசுகையில்,

” நான் நிறைய தமிழ் படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், சிறிய முதலீட்டில் உருவான திரைப்படமாக இருந்தாலும்… அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக இருக்கும். இதற்கு நிச்சயம் உங்களின் ஆதரவு தேவை” என்றார்.

 

நடிகை ஊர்வசி பேசுகையில்,

” சின்ன முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும், பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும் உழைப்பு ஒரே அளவு தான். இருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு படத்திற்கு பலம் அதன் தயாரிப்பாளர் தான். பொதுவாக பத்திரிகையாளர்கள் எங்களைப் போன்ற நடிகைகளிடம் பிடித்த நடிகர்? பிடித்த நடிகை? பிடித்த கதாபாத்திரம்? பிடித்த இயக்குநர்? என கேள்விகளை கேட்கிறார்கள். இனி பிடித்த தயாரிப்பாளர் யார்? என்றும் கேளுங்கள். ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேறு சில தயாரிப்பாளர்களை பற்றி புகார் அளிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். படம் தரமான படமாக இருக்கிறதா? அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் இருக்கிறதா? வணிகரீதியாகவும் அமைந்திருக்கிறதா? என ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து, தயாரிப்பாளர் அஜித் ஜாய் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். காதல் தான் உலகில் சிறந்த உணர்வு என சொல்பவர்கள் உண்டு. ஆனால் நட்பு என்பது ஆயுள் உள்ளவரை உடன் வரும். இதுதான் இப்படத்தின் ஹைலைட்டான விசயம். இதனுடன் தன்னுடைய பசியை கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் கௌரவத்திற்காக வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பம் ஒன்றும் உள்ளது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உங்களின் மேலான ஆதரவு வேண்டும். ” என்றார்.