ஒரே வீட்டில் படமாக்கப்பட்ட “முகை” திரைப்படம்! அறிமுக இயக்குனரின் புதிய முயற்சி!

 

அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தை LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA இணைந்து தயாரிக்கின்றனர்.

 

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…

‘முகை’ ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி பேசியதாவது…

டிரெய்லர் அருமையாக உள்ளது படமும் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது, படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அருமையாக பணி செய்துள்ளனர், மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும், கதைக்களம் புதிதாக இருக்கிறது. இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி.

 

இயக்குநர் அஜித்குமார் பேசியதாவது…

இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும், நன்றி.

தயாரிப்பாளர் சந்தோஷ் பேசியதாவது…

என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி. லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

 

இந்தப்படம் தியேட்டரில் வருமா இல்லை ஒடிடி தளத்தில் வருமா என்ற அறிவிப்பை படக்குழுவினர் அறிவிக்காமல் இருப்பது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு சிரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.