புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத் தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரவு 10 மணிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். உடனே இசை நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் உடனே மேடையிலிருந்து இறங்கிச்சென்றார்.
இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் போலீஸாரின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே இது குறித்து புனே போலீஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இரவு 10 மணி ஆனதால்தான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும், அதைப் புரிந்துகொண்டு விழா நடத்திய குழுவினரும் ஏ.ஆர்.ரஹ்மானும் முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய புனே காவல்துறையின் ஜோன் 2 டி.சி.பி ஸ்மர்த்தானா பாட்டீல், “ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால், இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. எனவே அங்கே விழா அரங்கிலிருந்த எங்கள் அதிகாரிகள் அதை அவரிடம் தெரிவித்தனர். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் அவரும் பாடலை நிறுத்தி, நிகழ்ச்சியையும் முடித்துக் கொண்டார்” என்றார்.
இசை நிகழ்ச்சிக்குப் பல ஆயிரம் பேர் வந்திருந்தனர். போலீஸார் தலையிட்டு இசை நிகழ்ச்சியை நிறுத்தியதால் அவர்கள் அதிருப்தியில் அங்கிருந்து சென்றனர். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.