ராதாரவிக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம்!!

நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர,
தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!!

இது தொடர்பாக இன்று,
சௌத் இந்தியன் சினி,டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் ( South Indian Cine Artists and Dubbing Artist Union ) உறுப்பினர் தாசரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் முரளிகுமார், சிஜி, மயிலைகுமார், ஜேம்ஸ், கண்ணன், மதி மற்றும் சுதா ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர்.

அதில் பேசப்பட்டதாவது:

டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் ராதாரவிக்கு உடந்தையாக நிர்வாகத்தில் KR செல்வராஜ் , கதிரவன் பாலு, ராஜ் கிருஷ்ணா,ராஜேந்திரன், ஸ்ரீலேகா, KRS குமார்,சீனிவாச மூர்த்தி, சத்திய பிரியா, பசி சத்யா, ஸ்ரீஜா ரவி, குமரேசன், அச்சமில்லை கோபி, சிவன் சீனிவாசன், ஷஜிதா, விஜயலட்சுமி, சாந்தகுமார், L பிரதீப், அனுராதா, மாலா k, ஜனா வெங்கட், வைரவர் ராஜ், கிருஷ்ணகுமார், MA பிரகாஷ், வினோத் சாகர், மேலாளர் அம்மு என்ற கமலவல்லி, ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்தே ஊழலில் ஈடுபட்டுள்ளனர்

உய‌ர்நீதிமன்ற உத்தரவு படி நடந்த விசாரணையில், ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் எத்தனை கோடி ஊழல் செய்திருக்கிறது என்பதை கணக்கிடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1985 ல் டப்பிங் சங்கத்திற்குள் நுழைந்த நடிகர் ராதாரவி 1999 வரை நிர்வாகத்தில் இருந்து பின்னர் மீண்டும் 2006 முதல் 2014 வரையும், 2018 லிருந்து தற்போது வரை டப்பிங் சங்க நிர்வாகத்தில் இருந்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்கத்திலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி ராதாரவி சங்கநீக்கம் செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், டப்பிங் சங்கத்தை பொருத்தவரை ராதாரவியிடம் செலவு கணக்கு கேட்கும் உறுப்பினர்களை உடனடியாக சங்க நீக்கம் செய்து சங்கத்தை விட்டு வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதனால், ராதாரவி டப்பிங் சங்கத்தில் செய்யும் ஊழல் வெளி உலகிற்கு தெரியாமல் தப்பித்து வந்தார். ராதாரவியின் ஊழல்/ நிதி மோசடியை நன்கு அறிந்த டப்பிங் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்காக ராதாரவியின் ஊழலுக்கு துணை நின்று, ராதாரவியின் குற்றங்கள் வெளியே தெரிந்துவிடாத வண்ணம் அவ‌ரை பாதுகாத்துவந்தனர்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு, எந்த ஒரு ஒப்புதலும் உறுப்பினர்களிடம் வாங்காமல், சங்கத்திற்கென்று சுமார் 1 கோடியே 25 லட்சத்திற்கு ஒரு கட்டிடம் வாங்கியதாக ஒரு கணக்கை காட்டுகிறார்.

செய்திருக்கும் ஊழல் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிலம் வாங்கியது சம்பந்தமான எந்த ஆவணங்களையும் வெளியிடாமல், புதையல் காத்த பூதம் போல அவைகளை பாதுகாப்புடன் வைத்திருந்தார்.

ஆனால், வெறும் 47.5 ல‌ட்ச‌த்திற்கு வாங்கிய‌ அந்த‌ நில‌த்தை, கோடிக்க‌ண‌க்கில் வாங்கிய‌தாக‌ போலி க‌ண‌க்கு காண்பித்திருக்கிறார் என்ப‌து தெரிந்த‌தும் உறுப்பின‌ர்க‌ள் அதிர்ச்சிய‌டைந்த‌ன‌ர்.

பேராசை பெரு நஷ்டம் என்பது போல, ராதாரவியின் பேராசையால், அவ‌ர் தூசாக‌ நினைத்த‌ டப்பிங் கலைஞர்களாலேயே சிக்கல் வலுத்தது.

திரைப்படங்களில் டப்பிங் பேசும் கலைஞர்கள், டப்பிங் பேசுவது மட்டும் தான் அவர்கள் வேலை என்றும், எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்காமல், டப்பிங் பேசிவிட்டு சென்றுவிட வேண்டும் என்ப‌து ராதார‌வியின் வாய்மொழி ச‌ட்ட‌ம்.

மற்றபடி ட‌ப்பிங் க‌லைஞ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சம்பளம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வதோ, அல்லது சம்பளத்தை கையில் வாங்குவதோ ராதாரவியால் தடை செய்யப்பட்டிருந்தது.

டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தை வசூலிப்பதற்காகவே ராதாரவி ஒரு சில ஆட்களை க‌மிஷ‌ன் அடிப்ப‌டையில் நியமித்திருந்தார்.
அவர்கள் வசூலித்து வந்து கொடுக்கும் டப்பிங் கலைஞர்கள் சம்பளப்பணத்தில் 5சதவிகிதத்தை பரிசாக அவ‌ர்க‌ளுக்கு கொடுத்துவிடுவார்.

வருடத்திற்கு டப்பிங் கலைஞர்கள் சம்பளப் பணம் சுமார் 5 கோடியை வசூல் செய்து கொடுத்தார்கள் என்றால், அந்த ஆட்களுக்கு 50 லட்சத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார்.

இதனால், இந்த சம்பள வசூல் வேலைக்கு போட்டி அதிகரிக்கவே, அந்த வேலைக்கு வருபவர்களிடம் டெப்பாசிட் தொகையை வசூலிக்கும் அளவிற்கு அது பெருகி, தற்போது கிட்டதட்ட 19 பேர் ராதாரவியால் நியமிக்கப்பட்டு அந்த சம்பள வசூல் வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அந்த சமயத்தில் தான், சின்னத்திரையில் மெகா தொடர்கள் பெருகி வந்ததை கவனித்த ராதாரவி, சினிமாவை போலவே சின்னத்திரையில் டப்பிங் பேசும் கலைஞர்களும் அவர்கள் சம்பளத்தை அவர்கள் கைகளில் வாங்கக்கூடாது என்றும்,

இனி ராதாரவி நியமிக்கும் ஆட்கள் வந்து ட‌ப்பிங் க‌லைஞ‌ர்க‌ளின் சின்ன‌த்திரையின் சம்பளத்தையும் வசூலிப்பார்கள் என்றும் அதில் 10% பிடித்தம் செய்துவிட்டு தான் கொடுப்பேன் என்று ஒரு எழுதப்படாத சட்டத்தை நடைமுறை படுத்த முனைப்பாக ராதாரவி செயல்பட்டார்.

அதுவரை பொருமை காத்த டப்பிங் கலைஞர்கள்
ராதாரவியின் இந்த சின்னத்திரை சம்பள வசூலை எதிர்த்து ஒன்று திரண்டனர். டப்பிங் கலைஞர்கள் தங்கள் எதிர்ப்பை சங்கத்திற்கே சென்று தெரிவித்த போது, முன்னின்று பேசிய டப்பிங் கலைஞர்களை சங்கநீக்கம் செய்து வெளியேற்றியது டப்பிங் சங்க நிர்வாகம்.

நீக்கப்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு போய் விட்டால், பல ஊழல்/கையாடல் வெளிவந்துவிடும் என்பதால், நீக்கிய‌ கையோடு உடனடியாக அவர்களோடு சமாதானம் பேச ராதாரவி கூடாரத்திலிருந்து சில டப்பிங் கலைஞர்களை அனுப்பி, இப்போதே சென்று அண்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.அவர் உங்களை தாயுள்ளத்தோடு மன்னித்துவிடுவார். ந‌ம‌க்கு எத‌ற்கு வ‌ம்பு, வேலை இல்லாம‌ல் குடும்ப‌ம் ந‌டுத்தெருவிற்கு வ‌ந்துவிடும் என்று க‌ரிச‌ன‌மாக‌வும், அண்ண‌ன் கோப‌ப்ப‌ட்டால் நீ சினிமாத்துறையில் வாழ‌வே முடியாது என்று மிர‌ட்ட‌லாக‌வும் மத்தியஸ்தம் செய்வார்கள்.

அதை ஏற்காமல் நீதிமன்றம் செல்லும் உறுப்பினர்கள் சினிமாத் துறையில் வேறு எந்த பணியும் செய்யக்கூடாது என்று ஒத்துழையாமை கடிதம் ஒன்றை தயாரித்து, FEFSI பெயரை சொல்லி,

விருக‌ம்பாக்க‌ம் முத‌ல் நுங்க‌ம்பாக்க‌ம் வ‌ரை மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒலிப்பதிவுக் கூடங்களுக்கும், ஆங்கில டப்பிங் பட ஒலிப்பதிவு கூடங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைத்து இடங்களுக்கும்,
அந்த டப்பிங் கலைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த டப்பிங் கலைஞரை நாங்கள் சங்க நீக்கம் செய்துவிட்டோம். இவருக்கு யாரும் வேலை கொடுக்க வேண்டாம் என்று கடிதம் அனுப்பி, நிஜ வில்லனை போல அவ‌ர்க‌ள் வாழ்வாதார‌த்தை கெடுப்பார்.

கோபத்தில் இது போல ராதாரவி செய்கிறார் என்று முதலில் நினைத்த பாதிக்க‌ப்ப‌ட்ட‌ டப்பிங் கலைஞர்கள், பிற‌கு தான், எங்கே தான் செய்திருக்கும் ஊழல்/ கையாட‌ல் வெளிவந்துவிடப்போகிறது என்கிற பயத்தில் இவ்வாறு நடந்துக்கொள்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டார்கள்.

நடக்கும் அநியாயங்களை பார்க்க இயலாமல், இளையவர்களோடு மூத்த டப்பிங் கலைஞர்களும் கைகோர்க்க, டப்பிங் சங்கத்தில் நடந்துக்கொண்டிருக்கும் ஊழலை விசாரிக்க வேண்டி, மூத்த உறுப்பினர்களான மயிலை.S குமார், திருமதி சிஜி, மறைந்த காளிதாஸ் ஆகியோரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் Writ மனு ஒன்று WP 32680 of 2019 Hon’ble High Court Order dated 28.11.2019 தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி S.M .சுப்பிரமணியம், ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க நிர்வாகத்தின் மீது வந்துள்ள புகார்கள் அனைத்தையும் விசாரிக்கும் படி தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்திரவின் படி, டப்பிங் சங்கத்தில் நிலம்/கட்டிடம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா, முறையான பத்திரப் பதிவு ஆவணங்கள், டப்பிங் சங்க வரவு செலவு கணக்கு, உறுப்பினர் சேர்க்கை கணக்கு, உறுப்பினர்களின் புகார் கடிதங்கள் என அனைத்தையும் தீவிரமாக விசாரணை செய்த தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், இறுதியாக 10.01.2022 அன்று தனது விசாரணை முடிவறிக்கையை வழங்கினார்.

47 பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை அறிக்கையில், நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம், சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பது உறுதியானது.

1) வெறும் 47.50 லட்சத்திற்கு நிலம் வாங்கிவிட்டு, உறுப்பினர்களிடம் சுமார் 1 கோடியே 20 லட்சம் செலவானதாக பொய் கணக்கு காட்டிய, ராதாரவியின் நிர்வாகம் பத்திரப் பதிவுத் துறையை ஏமாற்றி சொத்தை பதிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

2) 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.

3) குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறி, 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களை டப்பிங் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, பல ஆண்டுகளாக அவர்களிடமும் பெருந் தொகையை கட்டாய கமிஷனாக வசூலித்து சட்டவிரோதமாக மோசடி செய்துவந்திருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.

4) ஒவ்வொரு டப்பிங் கலைஞர்களிடமும் அதிகப்படியான சந்தா வசூல் செய்துவிட்டு, குறைந்த தொகையை வசூலித்ததாக போலியாக தகவலை அளித்து தொழிலாளர் நலத்துறையை ஏமாற்றிவந்ததும் பகிரங்கமானது.

5) 2017 முதல் பொதுக்குழுவை சட்டப்படி நடத்தாமல், உறுப்பினர்களிடம் முறையாக கணக்கறிக்கை தந்து ஒப்புதல் பெறாமல், நடிகர் ராதாரவியின்‌ நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் லட்சக்கணக்கில் பொய்க்கணக்கு எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

6) தொலைபேசி கட்டணம், பெட்ரோல் முதல் இல்லாத WEBSITE டிற்கு லட்சக்கணக்கில் செலவுக் கணக்கு காட்டியது வரை அனைத்திலும் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

7) தொடர்ந்து பல ஆண்டுகளாக சங்க நிதியில் பல லட்சங்கள் நஷ்டம் அடைந்துவிட்டதாக கணக்கு காட்டிவந்த நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் திறனற்றது என உத்திரவு சுட்டிக்காட்டியுள்ளது‌.

8) சங்க நிதியில் முறைகேடு நடந்திருப்பதை கேள்வி கேட்ட உறுப்பினர்களை சட்ட விரோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் சங்க நீக்கம் செய்திருப்பதும் பகிரங்கமானது.

9) உத்தரவு கிடைக்கப் பெற்ற 15 முதல் 30 நாட்களுக்குள், பல கடிதங்கள் மூலமாக இத்தனை ஆண்டுகளாக சங்க நிதி வரவு செலவு கணக்கு கேட்ட உறுப்பினர்களுக்கு, அதை பரிசோதிக்கவும், வேண்டிய ஆவணங்களை நகல் எடுத்து, தேவைப்பட்டால், ராதாரவியின் நிர்வாகத்திற்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், மனுதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர,
தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதனால், ராதாரவியின் நிர்வாகத்தை சேர்ந்த அனைவருமே வழக்குகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் நம்பப்படுகிறது.

ராதாரவியின் நிர்வாகம் சட்டத்தால் தண்டிக்கப்படும் நாளை எதிர்நோக்கி பாதிக்கப்பட்ட டப்பிங் கலைஞர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

23 சங்கங்கள் உள்ளடக்கிய FEFSI சம்மேளனதத்தில் அங்கம் வகிக்கும் டப்பிங் சங்கத்தின் நிர்வாகிகள் செய்துள்ள இந்த சங்க நிதி மோசடியால் திரைத்துறையே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.

நடிகர் ராதாரவியின் நிர்வாகம் மீது FEFSI அமைப்பு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்?

அரசியல் ரீதியாக நடிகர் ராதாரவியை பாஜக கட்சியிலிருந்து விலக்குமா?

முறைகேடாக காணாமல் போன டப்பிங் சங்க நிதி, அதற்கு காரணமான ராதாரவியின் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கே வழங்கப்படுமா ?

போன்ற பல கேள்விகளுக்கான சட்ட ரீதியான‌ பதிலும், நியாயமான‌ நிரந்தரத் தீர்விற்காக கோர்ட்டுக்கு செல்கிறோம். அதன் மூலம் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம், என்றார்.