தினசரி வாழ்வில் இயல்பான 4 இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள், அவர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை, சொல்லும் அழகிய திரை அனுபவமாக உருவாகியுள்ளது “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம். AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தலைமையில் நடந்தது. தற்போது இப்பட தலைப்பிற்கு சிக்கல் நேர்ந்துள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம் தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. அதை அவர் படமாகவும் எடுத்தார். இப்போது அவரது மகள்தீபாலக்ஷ்மி இப்படதலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு…
இன்று மாலை அப்பாவின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் தலைப்பையே வைத்து படம் எடுத்துவரும் டைரக்டர் விஷால் வெங்கட் Vishal Venkat , தயாரிப்பாளர் அஜ்மல் கான், உதவித் தயாரிப்பாளர் ரேயா ஆகியோர் வீட்டிற்கு வந்திருந்தனர்.
திரைக்கலைஞர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் எழுத்தாளர் செல்வேந்திரன் Selventhiran இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரும் கூட வந்திருந்தார்.
சாத்தூரில் இருக்கும் அக்கா காதம்பரியும் Kadhambari Jeyakandhan, அங்கிள் மாதவராஜும் மீட்டிங்கில் எங்களோடு இணைந்து கொள்ள, செல்வேந்திரன் அனைவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்.
நம் தரப்பில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் தலைப்பினை இன்னொரு படத்திற்கு வைப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கினோம்.
‘சில நேரங்களில் சில மனிதர்களோடு’ எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருக்கும் அடையாளத்தை இந்த டிஜிட்டல் உலகம் அழித்து விடும் என்பதை விளக்கினோம். இதுவரை தமிழ் இலக்கிய உலகிலும், திரைப்பட வரலாற்றிலும் மிக முக்கிய இடம் வகிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எதிர்காலத் தலைமுறைக்குத் தெரியாமலேயே போய்விடும் என்பதைச் சுட்டிக் காட்டினோம்.
இலக்கியத்திலும், கலையிலும் மைல் கல்லாக அறியப்பட்ட படைப்புகளைப் பாதுகாப்பது அந்தத் துறை சார்ந்த அனைவரது பொறுப்பாகும் என்பதையும் குறிப்பிட்டோம்.
திரைப்படக் குழுவினரின் சார்பில் இவை எவற்றுக்குமே சரியான பதில் இல்லை. இந்தப் படத்தினால், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகத்திற்கு ஒரு பிரமோஷன் கிடைக்குமே என்றார்கள். அப்படி ஒரு பிரமோஷன் தேவைப்படும் நிலையில் அந்தப் புத்தகம் இல்லை என்பதை எடுத்துரைத்தோம்.
தங்கள் படத்திற்கு இதுவே சிறந்த தலைப்பாக இருக்குமென்றும் ஒரு வாதம் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தோம்.
இந்தப் பிரச்சனை குறித்துக் கலந்தாலோசித்து, பரிசீலனை செய்து மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறினார்கள். நாம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நம் விருப்பத்தைத் தெரிவித்தோம். விடை பெற்றுச் சென்றிருக்கிறர்கள்.
பொறுத்திருப்போம். நல்ல முடிவினை எடுப்பார்கள், எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இன்னும் நம் முயற்சிகள் தொடர வேண்டும் என்னும் தெளிவுடன் பயணிப்போம்.