இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால், ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார். அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “சாஹோ” படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் குவித்த அவர், தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத்துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
படத்தில் இடம்பெறாத “சாஹோ” பட ஹீரோ தீம் இசையை, NFT ( Non-Fungible Token ) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50% , கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையிக் செய்யப்பட்ட NFT ( Non-Fungible Token ) முயற்சி ஆகும். இந்த இசை தொகுப்பினை, பட இயக்குநரை தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை, இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையினை எங்குமே வெளியிடவில்லை.
இந்த NFT ( Non-Fungible Token ) வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென கேட்ட போது, இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பினை உயரிய விலை ஒன்றை அளித்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும் எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்