இது எடுப்பதற்கு மட்டும் சவாலான படமல்ல… பார்ப்பதற்கும் சவாலான படம். கொஞ்சம் பிசகினாலும் ” இது வெறும் உரையாடல் படம் ” என்று பெயர் பெற்று சொதப்பலாகிவிடும். அப்படி இருந்தும் விதவிதமான வித்தியாசமான கேமரா கோணங்களால் நம்மை ஆச்சர்ய படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.
“குரங்கு குல்லாவ எப்படிய்யா காட்ட முடியும்… “, ” பக்கத்து பேனர்ல ஓவியாவ பாத்தான்… “, ” ஆப்பம் சூடா சாப்டா தான் நல்லா இருக்கும்… “, ” மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க, சீக்கிரம் ரிலீசாகனும்னு நினைச்சுட்டு இருக்கேன்… ” பெரியவங்க செய்றது பெருமாள் செஞ்சதாவே சொல்வாங்க…”, ” அழுவ வச்சு போட்டோ எடுக்கறாங்க… “, போன்ற இடங்களில் தியேட்டரில் சிரிப்பலைகள்.
” பூனைகிட்ட குருவிக் குஞ்சுங்க மாட்டுன மாதிரி போலீஸ்கிட்ட நான் மாட்டிக்கிட்டேன்… “, ” எப்படி பண்ணேன்னு சொல்லட்டா… ஏன் பண்ணானு சொல்லட்டா… “, ” உனக்கு என்ன வருதோ சொல்லு… ஒன்னுக்கு வருது சார்… “, ” எனக்கென்னமோ போலீஸ் தான் என்கிட்ட மாட்டிட்ட மாதிரி இருக்கு… “, ” பஞ்சு மிட்டாய் கலர் ரூபாய் நோட்டு… “, “பர்சு எங்கிட்ட தான் இருக்கு.,, அதனால தான் பயப்படுறேன்… “, ” கீச்சு கீச்சுனு பேசுவான் ஆனா மரியாதையே இல்லாம பேசுவான்… ” என்று சீன் பை சீன் பார்த்திபனுக்குள் ஒளிந்திருக்கும் நக்கல் பிடித்த வசனகர்த்தா பட்டாசு கிளப்புகிறார்.
” உறவுங்க இத்துப் போறத விட அத்துப் போறதே மேல்… “, ” உசாவ பத்தி கேப்பிங்க உசாரா இருக்கனும்ல… “, ” வொய்ப்போட கைபக்குவம் ரொம்ப பிடிக்குமா… வொய்ப்பயே ரொம்ப பிடிக்கும்… “, ” எப்ப சம்பாதிப்பு சேமிப்புனு வந்துச்சோ அப்பத் தான் கொலை கொள்ளை எல்லாம் வந்துச்சு… “, ” அடுத்த ஜென்மத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல… இந்த ஜென்மத்துலயே வாழ்ந்து பாத்துடனும்… ” ” போலீஸ் எதுக்கு இருக்கோம்… புடுங்கறதுக்கு… இருக்கறவன்ட்ட பணத்தையும் இல்லாதவன்ட்ட உயிரையும் புடுங்கறதுக்கு… ” ” அம்மாலாம் அழகா இருக்கனும்னு கட்டாயம் இல்ல… “, ” தலைகாணில பஞ்சு இருந்தா தூங்கலாம்… தங்கம் இருந்தா தூங்க முடியுமா… ” ” தாய்மைங்கறது பெண்பால் அல்ல… அன்பால்… ” , ” உஷாவோட நாக்கும் செத்துப் போச்சு… ” ” சூழ்நிலை தான் ஒரு மனுசன கொலைகாரனாவே மாத்துது… ” ” பணக்காரங்க தான் சட்டத்துல இருக்கற ஓட்டைல தப்பிக்க முடியுமா… கங்காரு மாதிரி குழந்தைய சுமந்துட்டே இருக்கற என்னைய மாதிரி ஏழை தப்பிக்க கூடாதா… ” ” இப்ப தான் சார் காந்தியோட சிரிப்புல அர்த்தமே மாறி இருக்கு… ” போன்ற இடங்களில் சீரியசான வசனகர்த்தா பார்த்திபன் எட்டிப் பார்க்கிறார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த ஒலிப்பதிவுக்கான தேசிய விருது, சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது என்று மூன்று பிரிவுகளில் தேசிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புண்டு. சி. சத்யாவின் பின்னணி இசை அருமை. படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அவருடைய பின்னணி இசை பெரிய அளவில் உதவி உள்ளது.
உன்னைப் போல் ஒருவன் படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஒற்றை கமல் மட்டுமே தெரிவார். பீட்சா, வாட்ச்மேன், கொலையுதிர் காலம் போன்ற படங்களில் பெரும்பாலான காட்சிகள் ஒற்றையாளே சமாளிப்பது போல் இருக்கும். அந்தப் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் உள்ளது ஒத்த செருப்பு படம். குளிருதா பிள்ளை பாடல் படத்தில் இடம் பெறாதது ஏமாற்றம்.
காயத்ரியின் குரல் மனதைக் கவர்கிறது. ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படத்தை அனுப்புகிறேன் என்று பார்த்திபன் சொல்லி இருக்கிறார். ஆஸ்கர் கிடைக்குமா என்பது சந்தேகம், கிடைத்தால் சந்தோசம்!
உஷா என்ற மாசிலாமணியின் மனைவிக்கு என்ன நேர்ந்தது? அதற்கு காரணமானவர்களை கணவன் மாசிலாமணி என்ன செய்தார்? போலீஸ் விசாரணையில் அதை எப்படி விவரிக்கிறார் ? என்பதே கதை. நல்ல தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தால் வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள். இது போன்ற அதிசயங்கள் எப்போது தான் நடக்கும் என்பதால் இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். நடிகர் பார்த்திபனுக்கு ஆயிரத்தில் ஒருவன் எப்படி பெயர் சொல்லும் படமோ அதே போல இந்தப் படமும் பார்த்திபனின் சினிமா வாழ்க்கையில் பெயர் சொல்லும் படமாகத் திகழும்.