செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது

இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இத்தகைய திரைக்கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேரவேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன். கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்த படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா குடும்பத்திற்கு பாடல்கள் எழுதிவிட்டேன் என்கிற நிறைவு இருக்கிறது என்று கூறினார்.

எடிட்டர் பிரவின் பேசும்போது

செல்வராகவன் இயக்கத்தில் பணிபுரிய போவதற்கு முதலில் பயமும், தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் அதை உடைத்துவிட்டார். யுவனின் மேஜிக்கும், செல்வராகவனுடன் கூட்டணியும் நன்றாக வந்திருக்கிறது. பல காட்சிகள் சிரமப்பட்டு தான் எடுத்தோம். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை பார்த்ததும் கண்ணீர் வடிந்தது. சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்தேன் என்றார்.

கலை இயக்குநர் விஜயமுருகன் பேசும்போது

இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய விருப்பத்திற்கு பணியாற்ற முடியாது. ஆனால் இப்படத்தில் ஆரம்பத்தில் எஸ்.ஆர்.பிரபும், செல்வராகவனும் உங்கள் விருப்பத்திற்கு பணியாற்றுங்கள் என்று சுதந்திரமாக பணியாற்றுங்கள் என்று கூறுனார்கள். சூர்யாவும், சாய்பல்லவியும் தங்களுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றார்.

உமா பத்மநாபன் பேசும்போது

சின்னத்திரையில் தான் நான் அறிமுகமானேன். 25 வருசெல்வராகவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு நான் நினைத்துப் பார்க்காத விஷயம். சூர்யா எனக்கு பிடித்த நடிகர். இப்படத்தில் அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நான் இவ்வளவு சுலபமாக நடித்திருக்க முடியாது. சாய்பல்லவியும் சிறப்பாக நடித்திருந்தார் என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது

இப்படத்தில் ஒளிப்பதிவு செய்வது பெருமையான விஷயம். செல்வராகவன் இயக்கத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய எழுத்தை படிக்கும்போது கடினமான ஒரு சூழ்நிலையில் கேமராவின் கோணம் எப்படி அமைப்பது? என்பதை படித்தபோது ஒரு பலமான படமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். அதேபோல், சூர்யாவும் கடினமான சூழ்நிலையையும் பொருட்படுத்தால் படப்பிடிப்பில் ஈடுகொடுத்து நடித்தார் என்று கூறினார்.

தலைவாசல் விஜய் பேசும்போது

செல்வராகவன் இயக்கத்தில் நான் நடித்த முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’. அதன்பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவர் இயக்கத்தில் நடிக்கிறேன். ஆனால், இத்தனை வருடங்களுக்கு பிறகும் முதல் படத்தில் எப்படி பணியாற்றினாரோ அதே துடிப்புடன் இருப்பதைப் பார்த்து வியந்தேன். இளைஞர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது

செல்வராகவனுடன் பல படங்கள் பணியாற்றியிருக்கிறேன். மேலும், அவர் கதை கூறும்போதே அதன் முக்கியத்துவத்தையும் கூறுவார். ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் சிறு சிறு விஷயங்களையும் எப்படி பண்ணலாம் என்று ஆராய்ச்சி செய்வோம். அதேபோல், இப்படத்திலும் பணியாற்றியிருக்கிறோம் என்றார்.

சாய்பல்லவி பேசும்போது

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவி போல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் செல்வேன். ஆனால் இப்படத்தில் நான் தயார்படுத்திக் கொள்வது தேவையில்லை என்று உணர்ந்தேன். இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக் கொள்ள போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வராகவன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் செல்வராகவன் வல்லவர். சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது

இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு இன்றுவரை குறையாமல் இருக்கிறது. அனைவரும் கேட்ட கேள்வி வெளியாக எவ்வளவு காலம் ஆகும் என்று தான். சில காரணங்களால் படம் நினைத்ததைவிட தாமதமாக வருகிறது. தாமதமானாலும் சரியான நேரத்திற்குதான் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் அழைத்த நேரத்தில் எந்த காரணமும் சொல்லாமல் பணியாற்றினார்கள். செல்வராகவன் எழுதிய கதை சிறிதும் மாறாமல் அப்படியே வந்திருக்கிறது. இப்படம் மே மாதம் 31ம் வெளியாகும் என்றார்.

இயக்குநர் செல்வராகவன் பேசும்போது

இந்த கதையின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போதே சூர்யா தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. நடிப்பில் மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் சிறு சிறு விஷயங்களைக் கூட கூர்மையாக கவனித்து பேசுவார். சூர்யா இயக்குநரின் நடிகர். அவர் எனக்கு கிடைத்தது வரம். சாய்பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு சொல்வதைக் கேட்கும் திறமையான நடிகை என்று கூறினார்.

நடிகர் சூர்யா பேசும்போது

அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாக கேட்க முடியவில்லை. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.

சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார்.

என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து எடுங்கள் என்றார்.

‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். சோனி மியூசிக் சஞ்ஜய் வாத்வான், மோகன்தாஸ், தயாரிப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் படக்குழுவினரை வாழ்த்தினர்.