பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேசவைப்பது வீண் – இயக்குனர் பரபரப்பு பேச்சு

எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி உள்ளதுடன் இசையமைத்தும் உள்ளார் இயக்குனர் கே.எஸ்.நேசமானவன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும்.. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார்.. அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவிமான ஜிஜி பேசும்போது, “இந்த படம் என்னுடைய முதல் முயற்சி.. படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.. இந்த படத்தை கமர்சியலாக எடுக்காவிட்டாலும் கலகலப்பாக நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியுள்ளோம்.. விநியோகஸ்தர்கள் எங்களைப்போன்றவர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளிவர உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காமெடி நடிகர் முத்துக்காளை பேசும்போது, “படத்தில் நடிக்க அழைக்கும்போது அண்ணே உங்களுக்கு முக்கியமான வேடம் என்று தான் அழைக்கிறார்கள்.. அப்படி நடித்த எங்களது புகைப்படத்தை போஸ்டரில் இடம் பெறச்செய்வதில் என்ன கஷ்டம்..? அதுதான் எங்களுக்கான அங்கீகாரமாக இருக்கும்.. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் யூடியூப்(Youtube) சேனல்களில் நான் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்.. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.. படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இயக்குனர் நேசமானவன் பேசும்போது, “பெருமைக்காக சொல்லவில்லை என்றாலும், என்னுடைய இயக்கத்தில் நடித்த முனீஸ்காந்த் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டு நான் சந்தோசப்படுகிறேன்.. என்னுடைய படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மிக பெரிய இடத்திற்கு வந்து விட மாட்டாரா என்று ஆசைப்பட்டேன்.. அது நடந்து விட்டது.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. காரணம் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் பிரபலங்களை அழைத்து, அவர்களை பேசவைத்து அவர்களை கவனித்து அனுப்புவது மட்டுமே வேலையாக மாறிவிடும்.. எங்களுக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அடுத்ததாக எங்கள் படத்தை திரையில் கொண்டு வருவதற்கு தங்கள் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும் வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும். விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு ஒரு தியேட்டர் கிடைத்துவிடாது.. அங்கே வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும்.. அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ்

பாடகர்கள் – வேல்முருகன், சின்னப்பொண்ணு, தினேஷ்.வி, கவிதா, அய்யாத்துரை, யுகேந்திரன், பிரஷாந்தினி

நடனம் – மதுராஜ், ரமேஷ் கமல், நிர்மல்

படத்தொகுப்பு – ராஜேந்திரன்

ஒளிப்பதிவு – வினோத்.ஜி

கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் – கே.எஸ்.நேசமானவன்

தயாரிப்பு – எஸ் கோபால்