இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

பலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு செய்து வெளியிடுகிறது பைக்கர்.காம் (pycker.com) எனும் இணைய தளம்.

இந்த வாரம், தெலுங்கில் 5 படங்களும் (வேர் ஸ் த வேங்கடலட்சுமி, ஜஸ்ஸி, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன், மவுனமே இஷ்டம், வினரா சோதரா வீர குமாரா), இந்தியில் மேரே பயாரே பிரைம் மிநிஸ்ட்டர் மற்றும் போட்டோகிராப் உட்பட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் வெளியானபோதும், இந்நிறுவனம் தமிழ் படமான ’நெடுநல்வாடை’யை இவ்வாரத்தின் மிகச்சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழில் சமீபத்தில் வந்த படங்களில் அதிகபட்சமாக இந்தப் படத்துக்கு 3.7 ரேட்டிங் கொடுத்துள்ள இந்தத் தளம் இப்படத்தையும் அதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள பூ ராமுவையும் பெரிதும் பாராட்டி உள்ளது.

இந்த வெற்றிச்செய்தியால் பூரித்துப்போயுள்ள அவரது நண்பர்களான 50 தயாரிப்பாளர்களும் இயக்குநர் செல்வக்கண்ணனுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தங்களது வாட்ஸ் அப் பக்கத்தில் பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள். சினிமாவில் போட்ட பணம் திரும்பிவருவதென்றால் சும்மாவா?