பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.
எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.
தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.
‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.
இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.
அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் சீனு சாருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார். அவர் உருவாக்கிய கேரக்டர் இதுவரை தப்பாகி இருக்கிறதா என்ன..? இதிலும் அப்படி ஒரு அருமையான கேரக்டர்.
உதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.
சின்ன வயதில் டிவியில் பார்த்த வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்கும்போது என்னுடைய பாட்டியைப் பார்ப்பது போலவே இருந்தது.
இத்தனை வருஷங்களில் சீனு ராமசாமியின் வயசு மட்டும் மாறியிருக்கே தவிர, அவர் அப்படியே தான் இருக்கிறார். மாறவே இல்லை. முன்னெல்லாம் சில காட்சிகளை படமாக்கும்போது கொஞ்சம் யோசிச்சு பண்ணுவார்..
ஆனா இப்ப ஸ்பாட்டுக்கு வர்றப்பவே இதுதான் எடுக்கணும்னு தீர்மானிச்சு முன்னைவிட ரொம்பவே தன்னம்பிக்கையா படம் பண்றார். நான் நடித்த படத்தோட டைரக்டர் தேசிய விருது வாங்கிட்டார்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.
இந்தப்படத்துல தேங்காய் மண்டிக்கு சொந்தக்காரி அப்படிங்கிறதால கொப்பரை தேங்காய் உடைச்சு உடைச்சு கையில எல்லாம் சரியான காயம்..
முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு மறுநாள் காலையிலேயே எந்த பயிற்சியும் இல்லாம தேங்காய் உடைக்க விட்டுட்டாங்க…
இதுதவிர ‘வாழ்க விவசாயி’ங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.. இதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
ஒரு பக்கம் உணவுப்பொருள் விலை ஏறுது.. ஆனா இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை ஏன் அதிகரிக்கிறது என்கிற விஷயத்தை இந்தப்படம் அலசுகிறது. ஷூட்டிங் சமயத்துல கிராமத்து மக்கள் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.
விவசாய நிலத்துல காவல் காக்குற பரண்மீது ஒரு பாடல் காட்சி எடுக்கும்போது, அதுல விரிசல் ஏற்பட்டு 12 அடி உயரத்துல இருந்து அப்புக்குட்டி கீழே விழ, அவர் மேல நாங்க எல்லாம் விழுந்தோம்.. ஆனா யாருக்கும் அடியெல்லாம் எதுவும் படலை.
அடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன்..
ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதுக்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள்.. இதிலேயும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். இதில் அவ்வளவாக மேக்கப் போடாமலே நடித்துள்ளேன்.
விரைவில் வெளிவர இருக்கும் பக்ஷி, சிகை படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்தப்படத்தை இயக்குகிறார். காக்கா முட்டை படத்தில் பணியாற்றியவர்.. அவரது பக்ஷி படம் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டுத்தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
பெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிச்சிருந்தும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஏன் இவ்வளவு இடைவெளி என கேட்கிறார்கள்..
என்னைக் கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன்.
சீனு சார் கூட என்கிட்டே சொல்லும்போது, உனக்கு திருப்தி தருகிற மாதிரியான, பல வருஷம் கழித்து பார்த்தாலும் நீ நினைத்து பெருமைப்படும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடி என சொல்வார்.
ஆனால் பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள்… அப்படியே கிராமத்து பெண் கேரக்டரா இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை.
தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்ல நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க..
அதேசமயம் இப்படி விலகியே போய்க்கிட்டு இருந்தா ரசிகர்கள் நம்மை மறந்துருவாங்க.. ஆரம்பத்துல அப்படி தோணலை. ஆனா இப்ப அது உண்மைன்னு தெரியுது. அதனால இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.
இப்போ தமிழ் சினிமாவோட கலரே மாறிட்டு வருதே… இங்கிலீஷ் பட இண்டஸ்ட்ரி மாதிரி ஆகிட்டு வருது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட லிஸ்டில் சேர்ந்துவிட்டது.
மிக மிக அவசரம், டு லெட் எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம்தானே,, புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளோடு வந்தால் பணம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்..
எப்போதும்போல அதே நான்ஸ்டாப் ஸ்பீடில் அவருக்கே உரிய தனித்துவமான வெண்கல குரலில் கலகலப்பாக பேட்டியை முடிக்கிறார்