கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் குடியரசு தின விழா

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் சாலிகிராமத்தில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது…

தற்போது நம் நாட்டில் முக்கியமான நோய் வறுமை. இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு நம் நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமெனில் இன்றைய இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்க மானியங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரித்தால் தான் இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். அரசுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி மூலமாக வரும் வருமானத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மூலமாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து உற்பத்தியை பெருக்கினால் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதோடு நாட்டுக்கும் நன்மை உண்டாகும். எனவே புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிரடி சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் பேசினார்.

மேற்கண்ட விஷயத்தை வலியுறுத்தி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு இந்த குடியரசு தினத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.