முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா!

0

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் முதல் வழக்கு தயாராவது போல, பூர்ணாவும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் தயாராகியிருக்கிறார். தான் தோன்றுகிற எந்த ஒரு கதாபாத்திரத்திலும், பூர்ணா தனது நிலையை அடுத்த அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறார். ‘சவரக்கத்தி’யில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை மறக்க முடியாது. அவர் பார்வையாளர்களை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் உணர்வுப்பூர்வமாகவும் ஒன்ற வைத்தார்.

சொல்லப்போனால் ‘ஒரு சரியான நடிகர் காலவரையறை பற்றி கவலைப்பட மாட்டார், தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் ‘அடங்க மறு’ படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், வலுவான ஒரு சிந்தனை மனதில் தோன்றும் வரை, நான் ஒரு ஆண் நடிகரை தான் இந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். பொது நிகழ்ச்சிகளிலிருந்து, டைனிங் டேபிள் வரை பாலின சமத்துவம் பற்றி நாம் பேசும்போது, அந்த வரம்புக்குள் அவர்களை கட்டுப்படுத்துவது அநியாயமாக இருக்கும். எனவே, இந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையை செயலாக்கினேன், படக்குழுவும் அதற்கு இசைந்தார்கள். இருப்பினும், ஒரு பொருத்தமான நடிகையை தேர்ந்தெடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு பூர்ணா அனைவரது தேர்வாகவும் வந்தார். இப்போது பூர்ணாவை தவிர வேறு எவருமே இந்த பாத்திரத்தை முழுமையாக்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்” என்றார்.

நடிகை பூர்ணா இந்த பாத்திரத்தில் நடித்த தனது அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அடங்க மறு ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படம். புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான தருணங்களைக் கொண்ட ஒரு படம். இந்தத் திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார், ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாரளராக இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சத்யா சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (எடிட்டிங்) மற்றும் லால்குடி என். இளையராஜா (கலை) ஆகியோர் இந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கினால் முழுப்படப்பிடிப்பும் முடிவடையும்.

Previous articleSeethakaathi Tamil Movie Review
Next articleOnce Audiences Are Settled Into The ‘World Of Ayya’, They Will Start Travelling Along – Editor R Govindaraj