ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அகம்பாவம்’.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.
திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக 10 கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
அவருடன் கொடூரமான வில்லனாக மிரட்ட இருக்கிறார் வாராகி. தான் தயாரிக்கும் படத்தில் பலர் கதாநாயகனாகவே விரும்புவர். ஆனால் வாராகி கதையின் முக்கியத்துவத்தை தூக்கி நமீதாவின் தோளில் வைத்துவிட்டு அதின் பிரம்மாதமான கதாபாத்திரமான வில்லன் ரோலை ஏற்றுள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யப்பை கழித்துவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி அகம்பாவத்தில் வாராகி ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரமும் இருக்கும்.
இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஜெகதீஷ் வி.விஸ்வம்,
ஸ்டண்ட் ; இந்தியன் பாஸ்கர்,
நடனம் ; ராபர்ட்,
படத்தொகுப்பு ; சின்னு சதீஷ்
கதை மற்றும் தயாரிப்பு ; வாராகி,
இணை தயாரிப்பு சுஜிதா செல்வராஜ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சத்ரபதி ஸ்ரீமகேஷ்.
இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளை கதையாக்கியிருக்கிறார். அதற்கு தனது வலிமையான வசனங்கள், திரைக்கதை யுக்தியின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ஸ்ரீமகேஷ்.
பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம்.
பெண் போராளிக்கும் ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த அகம்பாவம் படத்தின் கதை.
இதற்கு மத்தியில் அழகான ஒரு காதலும் இருக்கிறது.
இதில் நமீதா கதையின் நாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க உள்ளார்.
தயாரிப்பாளரும் நடிகருமான வாராகி மிகக் கொடூரமான அரசியல்வாதியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க இருக்கிறது.
துவக்க நாளன்றே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.
இந்த க்ளைமாக்ஸ் காட்சி தொடர்ந்து நான்கு நாட்கள் படமாக்கப்படுகிறது.
காரணம் நீண்ட நாட்கள் கழித்து, தமிழ்சினிமாவில் நீதிமன்றம் ஒன்றில் ஒரு பெண் ஒருவரின் துணிச்சலான வாதம், இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியாக இந்தப் படத்தில் இடம்பெறுகிறது.
இந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுதும் நமீதாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் என அடித்து சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.
இந்த காட்சி முழுக்க முழுக்க வசனங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நமீதா இதன் வசனங்களை ஒரு வாரம் முன்பே எழுதி வைத்துக்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு நடிக்கத் தயாராகியிருக்கிறாராம்.
இப்படி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன் என உற்சாகமான நமீதா இதற்கான ஒத்திகையிலும் கலந்துகொண்டு பக்காவாக தயாராகியுள்ளாராம்…
“இதுவரை நமீதா நடித்துள்ள 60 படங்களில் அவரிடம் நாம் பார்த்திராத புதுவிதமான நடிப்பை இதில் நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு நடை, உடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றிலும் புதிய நமீதாவை நீங்கள் பார்க்கலாம்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறார்.
இந்தப்படம் நமீதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்கும்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ் நம்பிக்கையுடன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு மேல் நடைபெற இருக்கிறது.