Get Your Freaking Hands Off Me Music Album Launch Stills

10

Ghibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். ரெஜினா ஜேப்பியார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.

கமல் சார் இருக்கும் மேடையில் பேசுவது பதட்டமாக இருக்கிறது. எதை பற்றி பேச பயப்படுகிறோமோ, கூச்சப்படுகிறோமோ அதை நிச்சயம் பேச வேண்டும். இதற்கு முன்னோடி கமல் சார். அவர் போட்ட பாதையில் தான் நான் எழுதி வருகிறேன். பாலியல் வன்கொடுமை உலகம் முழுக்க நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை தவிர, அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஜிப்ரான் சார் இந்த பாடலை எழுத சொல்லி கேட்டார். நிறைய வார்த்தைகளை எழுதினாலும் அது போதவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருந்தது. இந்த பாடல் மூலம் ஒரு பாலியல் வன்கொடுமை என்ற வேதனை நமக்கு நடக்கும்போது, அதை நினைத்து நாம் நின்று போய் விடவோ, பயந்து ஓடவோ கூடாது. அதை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதை தான் சொல்லி இருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன்.

சமீப காலமாக நிறைய சர்ச்சைகள் இந்த சமூகத்தில் நம்மை சூழ்ந்து வருகின்றன. அந்த நேரத்தில் ஒரு நேர்மறையான சிந்தனையை விதைக்க முன்வந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான். நல்ல விஷயங்கள் நிறையவே நடந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் தான் அதை விட அதிகம் ஆக்கிரமிக்கின்றன. கமல் சார் மாதிரி ஒரு நல்ல தலைவர் இந்த சமூகத்துக்கு வேண்டும். அவர் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அப்துல கலாம் சார் உடன் கொஞ்சம் பயணித்திருக்கிறேன். நாட்டிற்காக அவர் எப்போதும் சிந்தித்து கொண்டே இருந்தார். அவரை போலவே கமல் சார் நாட்டையும், இளைஞர்களையும் பற்றி சிந்தித்து வருகிறார். எங்கு போனாலும் கமல் சாரின் அரசியலை பற்றி பேசுகிறார்கள். புது அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ரெஜினா மேடம் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிற்கும் எந்த தயக்கமும் இல்லாமல் முன் நிற்கிறார் என்றார் சமூக ஆர்வலர் அப்துல் கனி.

சமூகத்தில் எல்லோரும் கூச்சப்படுகிற, பேச பயப்படுகிற ஒரு விஷயத்தை துணிச்சலாக முயற்சித்திருக்கிறோம். கமல் சார் பள்ளியில் இருந்து நான் வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. சமூகத்துக்கு திருப்பி கொடுப்பதில் கமல் சார் என்றைக்குமே தவறியதில்லை. நானும் ஏதாவது பண்ணனும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த ஆல்பம். கமல் சார் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது, என்னை ஊக்குவித்த அப்துல் கனிக்கு நன்றி, நல்ல விஷயங்களை எப்போதும் ஊக்குவிக்கும் ரெஜினா ஜேப்பியார் அவர்களுக்கும் நன்றி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது மாணவர்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

என்னுடைய 3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்னாலேயே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவருக்கு பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான். நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஜேப்பியார் இந்த இடத்தில் கல்லூரி கட்ட போகிறேன் என்று சொன்னபோது, இவ்வளவு தூரம் வந்து யார் படிப்பாங்க என்று நினைத்தேன். ஆனால் நானே இங்கு வந்திருக்கிறேன். இன்று விருட்சம் வளர்ந்து ஆலமரமாகி இருக்கிறது. ஜேப்பியார் ஆகச்சிறந்த முன்னோடி. அப்போதே இதை கணித்திருக்கிறார்.

வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். வழக்கமாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதி கொடுப்பார்கள், இங்கு நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Previous articleVijay Antony & Arun Vijay To Act In Director Naveen’s Next Titled Agni Siragugal
Next articleSouth Indian Film Writers’ Association Letter – Reg Director K.Bhagyaraj