“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு “சமத்துவம் அறிதல்” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
”உளவியலை கட்டமைக்கும் உட்கூறுகள்”, “தமிழகத்தில் கலையும் இலக்கியமும்”, “கலை இலக்கியத்தில் சாதி”, “பொதுப்புத்தியை உதிர்த்தல்”, “சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும்” , “சாதி ஒழிப்பு சமத்துவக்கருத்தியலை கலை இலக்கிய வடிவங்களாக்குதல்” ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ், அழகிய பெரியவன், AB.ராஜசேகரன், யாழன் ஆதி, பிரளயன், சுகிர்தா ராணி, வ.கீதா, பாமா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித்,
”எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாசித்தலும் ,எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாக இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள், அரசியல் , வாழ்வியல் வரலாறுகளை புத்தகங்களே நம்மை கேள்வியெழுப்ப வைக்கும். இந்த மூன்று நாள் நிகழ்வு இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது , நான் இந்த நிகழ்வுக்கு ஒரு மாணவனாகத்தான் கலந்துகொண்டேன்,பெரும் பயனுள்ளதாக இருந்தது, கலை இலக்கிய களத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவோம்” என்றார்.
மூன்று நாள் நிகழ்விலும் கலந்து கொண்ட இளம் எழுத்தாளர்கள், “இதுபோன்ற முன்னெடுப்புகள் மிக அவசியமானவை. எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு பல கதவுகளை இந்த நிகழ்வு திறந்து விட்டிருக்கிறது. இதன் மூலம் எங்களுடைய புரிதலும், சமூகத்தின் மீதான அக்கறையும் கூடியிருக்கிறது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த “நீலம் பண்பாட்டு மையம்” தோழர்களுக்கு நன்றி” எனக் கூறினார்கள்.
மேலும் நிகழ்வின் சிறப்பம்சமாக, மூன்று நாட்கள் இரவிலும் “பேராவூர் ரூபகம் தெருக்கூத்து சபாவின் மதுரை வீரன் நாடகம்”, “சென்னை கலைக்குழுவின் வீதி நாடகங்கள்” போன்ற தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன