காதல், நட்பு, துரோகம், ஆக்‌ஷன் கலந்த ஒரு கற்பனை கதை தான் காயம்குளம் கொச்சூன்னி – நிவின் பாலி!

கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் புகழ்பெற்ற நெடுஞ்சாலை ராபின்ஹுட் கதையை கேட்கும் ஆர்வம் எல்லா தலைமுறை ரசிகர்களிடையேயும் தவிர்க்க முடியாத உற்சாகத்தை அளித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் வழியாக பயணம் செய்த காயம்குளம் கொச்சூன்னி, அடுத்து சினிமா மூலம் பெரிய திரைகளிலும் வெளியாக இருக்கிறது. நிவின் பாலி, பிரியா ஆனந்த் , பிரியங்கா மற்றும் மோகன்லால் ஆகியோர் நடிப்பில் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை காண, மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

காயம்குளம் கொச்சூன்னியின் கதையை பற்றிய யூகங்களும், அனுமானங்களும் நிறைந்திருக்கும் இந்த வேளையில், அது பற்றி நிவின் பாலி கூறும்போது, ” இந்த காயம்குளம் கொச்சூன்னி ரோஷன் ஆண்ட்ரூஸின் பதிப்பு. இத்தனை நூற்றாண்டுகளாக, தசாப்தங்களாக நாம் நாட்டுப்புறக் கதைகளிலும் மற்றும் புத்தகங்களிலும் படித்த நெடுஞ்சாலை மனிதனை அடிப்படையாகக் கொண்ட கதை. தனது மக்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு உதவுவதற்கு ராபின்ஹூட்டாக மாறும் ஒரு சாதாரண மனிதனின் பயணம் தான் இந்த கதை. காதல், நட்பு, துரோகம், ஆக்‌ஷன், சமூகம் ஆகிற கூறுகளை உள்ளடக்கிய கற்பனை கதை தான் இந்த காயம்குளம் கொச்சூன்னி” என்றார்.

“1830களின் பின்னணியில் நடக்கும் இந்த காயம்குளம் கொச்சூன்னியின் அளவுக்கு pre productions வேலைகளை இதுவரை நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை. நிச்சயமாக, ரோசன் ஆண்ட்ரூஸ் சார் மற்றும் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சார் ஆகியோரிடம் பரஸ்பர புரிதல் இருந்தது. இல்லையென்றால், காயம்குளம் கொச்சூன்னியை திரையில் பார்ப்பதற்கான சாத்தியமே இல்லை. நாங்கள் காயம்குளம் ஏரியாவின் சில புகைப்படங்களை சேகரித்தோம். அதை வைத்து சந்தை, கொச்சூன்னியின் வீடு, களரி பயிற்சி கூடம், சிறை மற்றும் கிராமங்களை வடிவமைப்பதற்கான முழுமையான தேடலை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஒரு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒவ்வொரு செட்டுக்கும் மினியேச்சர் வடிவைம்மக்கப்பட்டது. அதுவே மிகப்பெரிய செல்வாக இருந்தது. ஆனால் நல்ல படைப்பாக இதை தர வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் உறுதியான முடிவால், அதை தொடர முடிந்தது. எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஆராய்ச்சி மற்றும் கதை உருவாக்கத்தில் முழுமனதோடு உழைத்தனர்” என்றார் நிவின் பாலி.

மோகன்லால் உடன் இணைந்து நடித்ததை பற்றி நிவின் பாலி கூறும்போது, “அதை வார்த்தைகளில் எப்படி விவரிக்க முடியும்? இது ஒரு கனவு நனவான தருணம் மட்டும் அல்ல, அவரிடம் இருந்து ஒழுக்கம், பர்ஃபெக்‌ஷன், நுணுக்கமான நடிப்பு ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். மோகன்லால் நடித்துள்ள இதிக்காரா பக்கி ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். அதை அதிகம் வெளியில் சொல்ல முடியாது, பார்வையாளர்களே திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிக்க வேண்டும்” என்றார்.

பிரியா ஆனந்த், பிரியங்கா, சன்னி வெய்ன், பாபு ஆண்டனி என உடன் நடித்த மற்ற நடிகர்களை பற்றி பாராட்டி பேசிகிறார் நிவின் பாலி. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் இருக்கும்.