சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா

யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக, சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.பெரிதும் எதிர்பார்க்கப்படும்
“ஆண் தேவதை” படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது, “படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி, குறிப்பாக உலகமயமாக்கல், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இந்த படம் பேசுகிறது. ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றியை அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றியை அடைகிறது. இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றியை பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சமுத்திரகனியின் நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை, அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார். ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆண் தேவதை படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Previous articleKallapart Movie Launch Stills
Next articleKanne Kalaimaane Certified For ‘U’