சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் – சூரி

ஒரு சில நகைச்சுவை நடிகர்களுக்கே ஒரு காமெடியன் என்ற இடத்தையும் தாண்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பயணிக்க கூடிய ஆற்றல் உண்டு. அந்த வகையில் சூரியை மிக முக்கியமான ஒரு நடிகராக நாம் சொல்லலாம். சமீப காலங்களில் தனது காமெடி மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த சூரி, தனது அடுத்த படமான சீமாராஜா பற்றி நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அத்தோடு இந்த படம் அவருக்கு எவ்வளவு விஷேசமான படம் என்றும், எப்படி அவர் கேரியரில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்பதையும் பகிர்கிறார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் எப்படி மிகச்சரியான நேரத்தில் எனக்கு தேவையான வெற்றிகளை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும், சினிமாவில் நீண்ட காலத்துக்கு என்னை பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் சூரி.

“சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது. பொன்ராம் எழுதிய கதைப்படி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் 6 பேக் வைக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் இதை காமெடியாக நினைத்தேன், ஆனால் ஜிம்மிற்கு போனபிறகு மிகவும் கடுமையான ஒரு அனுபமாக அமைந்தது. இறுதியாக, நான் கட்டுமஸ்தான உடலோடு சேர்த்து, உடல் நலத்தை பற்றிய புரிதலையும் பெற்றேன். அது என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் சூரி.

“டிரெய்லரின் இறுதியில் சில நொடிகள், படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த காட்சிகளை திரையரங்குகளில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். சீமராஜா ரிலீஸுக்கு பிறகு அந்த வகையில் ஒரு முழுமையான திரைப்படத்தை இயக்கும் முழுத்தகுதியும் பொன்ராம் அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன் என்று தன் இயக்குனர் பொன்ராம் பற்றிய புகழுரையை முடிக்கிறார்.

தனது சகோதரர் சிவகார்த்திகேயன் பற்றி அவர் கூறும்போது, “மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமான செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

சீமராஜா இன்னும் சில மணி நேரங்களில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. 24AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.