இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார். ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் பூமிகா.
பல முன்னணி கதாநாயகிகளுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடித்த ஒரு சில நடிகைகளில் பூமிகாவும் மிக முக்கியமானவர். உண்மையில், அவரது நட்பான, நல்ல மனது பலரது இதயங்களை வென்றுள்ளது. உடன் நடிப்பவர்களின் நடிப்பை அவர் ஒருபோதும் பாராட்ட தவறியதே இல்லை. “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று யு-டர்ன் படத்தில் சமந்தாவின் நடிப்பை பாராட்டியுள்ளார் பூமிகா.
தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, “நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்” என்றார்.
“தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும். நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை” என்று தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பூமிகா சாவ்லா.