தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை

வணக்கத்துக்குரிய பெருமக்களே!

27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள்.

நெடிய மதில்களுக்கிடையில் நீண்டகாலமாக சுழன்றுக் கொண்டிருக்கும் அவர்களது வெப்பம் மிகுந்த பெருமுச்சுகள் உங்களால் சுவாசம் பெறட்டும். அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே எனும் அண்ணல் அம்பேத்காரின் கூற்று உங்களால் உயிர் பெறட்டும். நம் பிள்ளைகளின் கைகளைத் தரித்திருக்கும் துன்பப்பூட்டுகளை உங்களது கைகளில் திகழும் ஆட்சி அதிகாரம் எனும் திறவுகோல் கொண்டு திறந்துவிடுங்கள்.

உலகமெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்கள் நீங்கள் இருக்கும் தசைநோக்கி வணங்கி நிற்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானம் அவர்களின் வழியில் ஆட்சி செய்யும் உங்களது அமைச்சரவையால் சாத்தியமாகும் வரலாற்று தருணம் வாய்த்திருக்கிறது. நம் பிள்ளைகள் சுதந்திரமாக சிறகடித்து வெளிவரும் வரம் ஒரு பச்சைத் தமிழரால் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே காலம் இதுவரை காத்திருந்ததாக உணர்கிறோம்.

உங்களது தலைமையிலான அமைச்சரவை இன்று இயற்றும் தீர்மானம் கோடானகோடி தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை ஏற்படுத்தும்.
சாதாரண ஒரு குடிமகன், தானே ஆட்சியில் இருப்பதாக உணரச்செய்யும் உங்களது எளிமையும் கனிவும் ஏழு தமிழ்ப்பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நெடுங்காலக் கண்ணீரை துடைக்கப்போகும் கருணையும் என்றென்றும் எல்லோராலும் நினைவு கூறப்படும்.
நினைத்து பார்ப்பவன் மனிதன், நினைவில் நிற்பவனே மாமனிதன். வாழும் மண்ணும் உள்ளளவும் நீங்கள் தமிழ்த் தலைமுறையால் மாமனிதராக நினைவு கூறப்படுவீர்கள்.

ஏழு தமிழர்களும் மட்டுமல்லாது ஏனைய தமிழர்கள் அனைவரும் உங்களை குலசாமியாக கொண்டாடுவார்கள். 27 ஆண்டுகள் சிறையில் வாடிய ஏழு பேரும் தமது வாழ்நாள் முடிவதற்குள் எல்லோரையும் போல நாமும் வாழ்ந்து விடமாட்டோமா என்று ஏங்கித்தவித்த தவிப்பு உங்களால் முடிவுக்கும் வரப்போகிறது என்று முழுமையாக நம்பிக் காத்திருக்கிறோம்.

அரசியலைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில அரசுக்கான இறையாண்மை அதிகாரம் எனும் நல்லதிகாரத்தை பயன்படுத்தி உங்களை நம்பிக்காத்திருக்கும் அவர்கள் ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என்று உங்களை வணங்கி வேண்டுகிறோம்.

Previous articleBigg Boss 2 Tamil Review 7th Sep 2018 Episode 83 D 82
Next articleYenthiru Anjali Yenthiru Full song