ஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி பல தடைகளை தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.
பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும் 360 திரையரங்குகளில் 2வது வாரம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் தயாரித்திருக்கிறேன், இந்த கதையை கேட்டவுடனே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்தேன். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து என் சக்தியையும் மீறி, கடன் வாங்கி தான் இந்த படத்தை தயாரித்தேன். ரிலீஸ் நேரத்தில் எனக்கு எல்லா வகைகளிலும் மிகவும் உதவிகரமாக இருந்தார் அன்புச்செழியன். அபிராமி ராமனாதன் பக்கபலமாக இருந்ததோடு சென்னை ஏரியாவில் படத்தையும் ரிலீஸ் செய்து கொடுத்தார். எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி எப்படி அனுராக் காஷ்யாப்பை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தீர்கள். அப்படி எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் அந்த ‘ருத்ரா’ கதாபாத்திரத்தை கொண்டாடி விட்டார்கள். குறைந்த காலத்திலேயே பின்னணி இசையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் மல்டி ஸ்டாரர் படம் என்பதையும் தாண்டி கதை பிடித்து போனதால் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்து கொடுத்தனர். அஜய் ஞானமுத்து அடுத்து இதை விட பெரிய, நல்ல படத்தை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார்.
மின்னலே படத்தின் போது தியேட்டரில் ரசிகர்கள் ஓ மாமா பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்தேன். அதன் பிறகு இந்த படத்தில் எல்லோரையும், ஸ்கிரீன் அருகில் போய் ஆட வைத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி என்றார் நடிகர் ரமேஷ் திலக்.
இந்த படத்துக்கு எல்லா இடங்களிலும் ரிபீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருக்கிறார்கள். படத்துக்கு எல்லா இடங்களிலும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், அதை அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதிக் கொள்கிறோம் என்றார் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்
கடைசி நிமிடம் வரை பட ரிலீஸில் பல பிரச்சினைகள் தொடர்ந்தன. ரிலீஸில் உதவிய அன்புச்செழியன் மற்றும் அபிராமி ராமனாதன் சாருக்கும் நன்றி. அவர்கள் இல்லையென்றால் இந்த சந்திப்பு நடந்திருக்காது, மொத்த குழுவின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறேன் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த காலத்தில் எப்படிப்பட்ட ஒரு படமும் இரண்டு வாரங்கள் தான் ஓட முடியும். அதை புரிந்து கொண்டு இயக்குனர்கள் நல்ல திட்டமிடலோடு, சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அது தான் எல்லோருக்கும் பயன் தரும் என்றார் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் உரிமையை எனக்கு கொடுத்து விட்டார் தயாரிப்பாளர் ஜெயக்குமார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ரிலீஸ் அன்று வந்து எனக்கு ரிலீஸ் செய்ய உதவி தேவை என்றார். நான் ஒரு வியாபாரி, எல்லா வியாபார வாய்ப்புகளையும் கணித்து அவர் கேட்டதை செய்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, 100 நாட்கள் ஓடணும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அபிராமி ராமனாதன்.
படித்த, எல்லாம் கற்ற, சினிமா மீது காதல் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தான் ஜெயக்குமார். அவர் இப்படி ஒரு படத்தை எடுத்ததில் வியப்பேதும் இல்லை. ஒரு கதையை எப்படி சொல்வது என்பதை முதல் படமான டிமாண்டி காலனி படத்திலேயே நிரூபித்தவர் அஜய் ஞானமுத்து. இமைக்கா நொடிகள் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார் என்பது புரிகிறது. இன்றைக்கு இந்தியாவில் அனுராக் காஷ்யப்பை பார்த்து பிரமிக்காத ஒரு படைப்பாளியே இருக்க முடியாது. எனக்கு நடிக்க தெரியாது என்று முதலில் சொல்லியிருக்கிறார். முதன்முறையாக நான் படத்தை பார்த்தபோது, அவரை பார்த்து வியந்து போனேன். அதர்வா தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி.
நானும், அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ருத்ரா கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர்கள் சாயல் படத்தில் வந்து விடுமே என்று பயந்தேன், அதனால் தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போது தான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு டப்பிங் பேச வைக்க மகிழ்திருமேனி சாரை கேட்டோம். 12 நாட்கள் மிகவும் பொறுமையாக டப்பிங் பேசிக் கொடுத்தார். நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். கதை எழுதும்போதே விஜய் சேதுபதி சார் தான் நடிக்கணும் என விரும்பினேன். அவர் திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது. நாளைய இயக்குனர் நாட்களில் அபிராமி ராமனாதன் சார் என் குறும்படத்தை பாராட்டி சினிமாவில் சீக்கிரமாக படம் இயக்க சொன்னார். இன்று அவர் இந்த படத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனி சார் தான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சினிமா நன்றாக இருக்க, அபிராமி ராமனாதன் சார் மாதிரி பலர் சினிமாவில் இருக்க வேண்டும் என்றார் அனுராக் காஷ்யப்.
படம் வெற்றி பெற்றவுடன் எப்படி இது ஆரம்பமானது என்பதை தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் இமைக்கா நொடிகள் ஒரு சாப்டர். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அஜய் என்ன பண்ணனும் என்பதில் தெளிவாக இருந்தார். படம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொன்னவுடன் தயாரிப்பாளரும் உற்சாகத்துடன் வந்தார். அனுராக் காஷ்யாப் சார் தான் ருத்ராவாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனர். அவருக்கு தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த படத்துக்கு ஆதரவாக இருந்த அன்புச்செழியன், அபிராமி ராமனாதன் சாருக்கும் நன்றி என்றார் நடிகர் அதர்வா முரளி.
இந்த சந்திப்பில் இணை தயாரிப்பாளர் விஜய், நடன இயக்குனர் சதீஷ், ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி பிரவீன், பேபி மானஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.