பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.
ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.
எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.
மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.
ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.