பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?’ என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும் கோலமாவு கோகிலாவுக்காக காத்திருக்கிறார்கள். இயக்குனர் நெல்சனிடம் அதற்கான விடையை கேட்டபோது, “இதுதான் நான் ‘கல்யாண வயசு’ பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
கோலமாவு கோகிலா படம் எதை பற்றியது என இயக்குனர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, “கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த கோலாமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.