“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்துக்கு இசையமைக்கும் மசாலா காஃபி!

காதல் கதைகள் எவர்கிரீன் என்றால் அவற்றை இன்னும் பசுமையாகவே வைத்திருக்க உதவுவது இசை என்னும் கூடுதல் அலங்காரம் தான். மொழிகளை கடந்தும், பல காதல் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் திருட காரணம் புத்துணர்ச்சியுடனான மயக்கும் இசை தான் காரணம். “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் அன்பை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி, பல புதிய திறமையாளர்களை படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வருகிறது. அவர்கள் தான் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், உற்சாகமான இந்த இசைக்கலைஞர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர். திறமைகளை ஊக்குவிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இயக்குனர் தேசிங் கூறும்போது, “இசை இன்னும் புதுமையாக இருக்க வேண்டும், அது தான் இந்த காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம். இயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால் இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம். எற்கனவே இவர்கள் உறியடி படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்.

“சமூக ஊடகங்களில் இந்த இசைக்குழுவிற்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. நாளுக்கு நாள் இந்த இசைக்குழுவுக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போவதும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முழுக்க, முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்” என்கிறார் ஆண்டோ ஜோசெஃப் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசெஃப். மலையாளத்தில் பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனம் இது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மானின் 25வது படம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.