2012 இல் 3D வடிவில் வெளிவந்த திகில் நிறைந்த நகைச்சுவைப் படமான ‘ஹோட்டல் ட்ரான்ஸில்வேனியா’ நினைவிருக்கலாம்! விசித்திரமான வடிவமைப்பு கொண்ட ‘மான்ஸ்டர்கள் (Monsters)’ என அழைக்கப்படும் ஓர் இனம் வாழும் காலகட்டத்தில், ட்ராகுலா என்கிற ஒரு மான்ஸ்டர், தன் இனத்தவர் வந்து தங்குவதற்கான ஒரு ஹோட்டலை நிறுவி, நடத்தி வருகிறது!
மனித இனத்தைச் சேர்ந்த ஒருவர் அஹ்ஹோட்டலில் வந்து தங்கினால் என்னாகும் என்பதை அப்படம் சித்தரித்தது! 2015-இல் வெளிவந்த அதன் இரண்டாம் பாகத்தின் கதை, ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது! இரண்டாம் பாகத்தில், மனித இனம் அந்த ஹோட்டலில் வந்து தங்க அனுமதியளித்திருந்தது!
புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்றாம் பாகத்தில், ட்ராகுலா குடும்பத்தினர், தங்களது ஹோட்டலுக்கு விருந்தினர்களை வரவழைத்து, தங்க வைத்து உபசரிக்கும் பணிக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, மிகப் பெரிய அளவில் உல்லாசபுரியாக வடிவமைக்கப்பட்ட ஓர் உல்லாசக் கப்பலில் போய் வர முடிவு செய்து, செயல் களத்திலும் இறங்குகின்றனர்!
ட்ராகுலா, அவரது மகள் மாவிஸ் மற்றும் மாவிஸின் கணவர் ஜானி, இதர குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என ஒரு பெரிய படையே கிளம்புகிறது
ஒரு கட்டத்தில், ட்ராகுலா, கப்பலின் தலைவியான எரிகாவின்பால் ஈர்க்கப்படுகிறார், அதன் பின்னணியில் பொதிந்துள்ள விவரங்கள் பற்றி அறிந்திடாமல்! மாவிஸின் முயற்சியால், பேராபத்திலிருந்து அனைவரும் தப்புகின்றனர்! விடுமுறையும் இனிதே நிறைவு பெறுகிறது!
முந்தைய இரண்டு படங்களையும் இயக்கியிருந்த ஜெண்டி டார்டாகோவஸ்கி தான் இதனையும் இயக்கியுள்ளார்! மார்க் மதெர்ஸ்பாக் இசையமைத்துள்ளார்.
தயாரிப்பின் சிறப்பசங்கள்:
1. 43 நாடுகளைச் சேர்ந்த பல தரப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இதன் உருவாக்கத்தில் பங்கேற்றனர்.
2. ஜெண்டி, தனது குடும்பத்தாருடன், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து உல்லாசக் கப்பலொன்றில் பயணம் மேற்கொண்ட தருணத்தில்தான், இப்படக்கதைக்கான கரு அவருக்கு உதயமானது!
3. பெர்முடா முக்கோணக் கடற்பரப்பில், காணாமல் போன சில படகுகளை ஒரு காட்சியில் காணலாம்.
4. கதைக்களத்தை எழுதித் தயார் நிலைக்குக் கொண்டு வர 15 மாதங்கள் ஆனது
5. ‘பப்பி’ என்கிற ஒரு குறும்படத்தில் மாவிஸ் கதாபாத்திரம், கப்பலில் பயணிக்கும் போது ஹோட்டல் ட்ரான்ஸில்வேனியா 3 என்கிற ஒரு புத்தகத்தைப் படிப்பதாகக் காட்டப்பட்டது!
6. பெர்முடா முக்கோணக் கடற்பரப்பில் உலா வரும் படகொன்றின் பெயர் டான் (Dawn). இயக்குநரது மனைவியின் பெயரது!