தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தைப் பெருமளவில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே.
அதனைத் தடுக்க சில தயாரிப்பாளர்கள் முயன்று தோற்றுப் போனார்கள். தியேட்டர் திருடர்கள் மேலும் வளர்ந்து சினிமாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கினார்கள். சினிமா விரும்பிகளும் டிக்கெட் விலை போன்ற சில காரணங்களைச் சொல்லி ஆண்ட்ராய்டு போன் மூலம் படம் பார்த்து இண்டர்நெட் திருட்டுக்கு உடந்தையாக இருந்தனர்.
இது தொடர்ந்தால் வெகு விரைவில் சினிமா தயாரிப்பு அடியோடு அழிந்துவிடும் என்ற நிலையில் கடந்த பிபரவரி மாதம் ரிலீசான ‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலியும், மே மாதம் ரிலீசான ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லமும் தக்க நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர்.
கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் ‘மனுசனா நீ’ படம் திருடப்பட்டதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர், கரூர் எல்லோரா தியேட்டர் ஆகிய இரண்டு தியேட்டர்களில் ‘ஒரு குப்பைக் கதை’ திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் மீதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர் மீதும் கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. விரைவில் கரூர் எல்லோரா தியேட்டர் மீது வழக்கு பாய உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் கவனத்துக்கு விசயத்கை் கொண்டு சென்று, அஸ்லமுக்கும், கஸாலிக்கும் தக்க நஷ்டஈடு கிடைக்கவும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு தியேட்டர்களிலிருந்து திருட்டு நடக்காமலிருப்பதற்கும் இந்த இரண்டு தயாரிப்பாளர்களும் சமீபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுக்களைப் பெற்று விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத் தரவும், உறுதியான நடவடிக்கை எடுத்து பைரஸியை ஒழிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
தயாரிப்பாளர்கள் அஸ்லமும், கஸாலியும் அமைச்சருக்கு நன்றி கூறினார்கள்.