தொட்ரா விமர்சனம்

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹீரோ பிரித்விராஜுக்கும், வசதியான வீட்டு பெண்ணான ஹீரோயின் வீணாவுக்கும் கல்லூரில் படிக்கும் போது காதல் பிறக்கிறது. இவர்கள் ஒரு பக்கம் தங்களது காதலை வளர்த்துக்கொண்டிருக்க, மறுபக்கம் வீணாவின் அண்ணனான எம்.எஸ்.குமார், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும், கலப்பு காதலுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே தங்கையின் காதல் விவகாரம் தெரிந்ததும், காதலர்களை பிரிக்க எம்.எஸ்.குமார் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். ஆனால், அவரது நடவடிக்கையும் தாண்டி, பிரித்விராஜும், வீணாவும் எஸ்கேப் ஆகி திருமணம் செய்துக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தேடி பிடிக்கும் எம்.எஸ்.குமார் வீணாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, ஏ.வெங்கடேஷ் உதவியோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது காதல் மனைவியை மீட்கும் பிரிவித்விராஜுக்கும், வீணாவுக்கும் ஏ.வெங்கடேஷ் மூலமாகவே பிரச்சினை வருகிறது. மறுபக்கம் எம்.எஸ்.குமாரும் அவர்களை கொலவெறியுடன் தேட, அவர்களிடம் காதல் தம்பதி சிக்கியதா அல்லது சிறகடித்து பறந்ததா என்பது தான் ‘தொட்ரா’ படத்தின் மீதிக்கதை

பிரித்விராஜ்க்கு ஏற்பட்ட தொடர் சறுக்கலை இந்தப்படம் முட்டுக் கொடுத்து நிமிர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. வீணா எடுப்பான தோற்றத்தோடும், எதார்த்தமான அழகோடும் கவர்கிறார். தனக்கு எந்த அளவுக்கு நடிக்க தெரியுமோ அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். ஹீரோயினின் அண்ணனாக படத்தின் வில்லனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எம்.எஸ்.குமாரின் வேடமும், அவரது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திரைக்கதையைப் போல எளிமையாக இருந்தாலும், திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. இயக்குநர் மதுராஜ் காதலிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களைப் பற்றியும், தங்களது காதல் பற்றி மட்டுமே யோசிக்க, அவர்களது காதலால், குடும்பங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லியிருப்பவர், காதல் மோகத்தால் பெற்றோர்கள் பேச்சை கேட்காத பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பேசி அறிவுரையும் கூறியிருக்கிறார்.