உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர்.
எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான் உலக எம்ஜிஆர் பேரவை. அதில் 11 பேர் உயர்மட்ட உறுப்பினர்களாக இருக்கிறர்கள். அந்த பேரவையின் மாநாடு வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம் என்றார் முருகு பத்மநாபன்.
உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைப்புகளை துவங்கி, சேவைகளை செய்து வருகிறார்கள் எம்ஜிஆர் பக்தர்கள். எந்த அரசியல் கலப்பும் இல்லாமல், எம்ஜிஆர் மீது உள்ள அன்பால், பக்தியால் தான் இந்த மாநாடு நடக்க இருக்கிறது. உலகம் முழுக்க இருந்து பலரும் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார் நடிகை லதா.
வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் சரித்திரத்தை எழுதுகிறார்கள். ஆனால் சரித்திரத்தை புரட்டி போட்டவர் எம்ஜிஆர் தான். சினிமாவில் ஓய்வு பெறும் வரை நாயகனாகவே நடித்து வெற்றி வாகை சூடியவர். தான் மறைந்தபோது கூட முதல்வராகவே இருந்து மறைந்தவர். இந்த சிறப்பு உலகில் எவருக்குமே கிடையாது. அவருடைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் எல்லாமே ஆய்வுக்குரியது. படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தன் படங்களில் எடுத்து காட்டியவர். அதனால் தான் அவரை வாத்தியார் என்று அன்போடு மக்கள் அழைக்கிறார்கள். திமுக கொடியை கூட எம்ஜிஆர் கொடி என்றே அழைத்தனர். அறிஞர் அண்ணாவை கூட எம்ஜிஆர் கட்சியா நீங்கள் என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவரின் புகழ். சினிமா வாயிலாக, அரசியல் வாயிலாக அவர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம். அவரின் மீது அன்பு வைத்துள்ள லட்சோப லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எம்ஜிஆர் அவர்களின் புகழை பரப்ப, எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். புரட்சித்தலைவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்து, இன்றளவும் எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவு நாளில் மக்கள் பயன்பெறும் வகையில் எம்ஜிஆர் பக்தர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ராமகிருஷ்ண மடம், ரோட்டரி கிளப், ஒய்எம்சிஏ எப்படி செயல்படுகிறதோ அந்த வகையில் இந்த பேரவையும் செயல்பட இருக்கிறது. புரட்சி தலைவர் பெயரில் இலவச கல்வி, ரத்ததான வங்கி என பல நல்ல விஷயங்களை செய்ய இருக்கிறோம். தன் வாழ்நாள் முழுக்க நாட்டு மக்களை பற்றியே சிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் அவர்களை பற்றிய ஆய்வு செய்ய அரசு 5 கோடி ஒதுக்கியிருக்கிறது. எம்ஜிஆர் வாழ்வியல் பண்புகள் பள்ளி, கல்லூரிகளில் இடம் பெற வேண்டும். உலகத்தில் எவ்வளவு உயர்வான வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் சொந்தக்காரர் புரட்சித்தலைவர். பிரதிபலன் பாராமல் மக்களுக்காக உழைத்தவருக்கு, பிரதிபலன் பாராமல் நாங்கள் செய்யும் கைமாறு தான் இது என்றார் மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி.
சைதை துரைசாமி, ஏசி சண்முகம், விஐடி விஸ்வநாதன், மரியஸீனா ஜேப்பியார், நாஞ்சில் விண்செண்ட், குறிஞ்சி வேந்தன், முனிரத்னம், முருகு பத்மனாபன், நடிகை லதா உட்பட 11 பேர் கொண்ட குழு அதற்கான இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து மலேசிய துணை பிரதமர், மொரிஷியஸ் துணை தலைவர், இலங்கை கல்வி அமைச்சர் ஆகியோரும் தமிழகம் முழுக்க இருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். தலைவருடன் நடித்தவர்கள், அவர் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி, ஜாக்குவார் தங்கம் கலை நிகழ்ச்சி, புரட்சி தலைவர் பற்றிய பட்டிமன்றம், பல்சுவை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மணவை மாணிக்கம் எழுதிய புத்தகம் வெளியீடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு என காலையில் இருந்து இரவு வரை விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழக ஆளுநர் விழா நினைவுத் தூணை திறந்து வைக்கிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் இந்த மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் என்றார் ஐசரி கணேஷ்.