களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, சாதனை புரிந்த “அலுங்குறேன் குலுங்குறேன்” பாடலை எழுதிய மணி அமுதவன் இந்த பாடலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும்.
இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். அதன் பலன் தான் களவாணி 2 ரசிகர்களின் இதயங்களை கூடிய விரைவில் திருட இருக்கிறது.
ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.