இந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அண்ணல் அம்பேத்கரின் இந்த பிறந்த தினத்தையொட்டி அப்பகுதி ஏழை மக்களுக்கு வேட்டி சேலை, அரிசி, பள்ளிக்கு கடிகாரம், நாற்காலிகள் போன்றவற்றை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினர்.
இந்த நல உதவிகளை நடிகர் ஜீவா வழங்கினார். விழாவில் ஜீவா பேசுகையில், “அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான மாபெரும் தலைவர். அதனால்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அண்ணலுக்கு விழா எடுக்கிறார்கள்.
தலைவர் ரஜினிகாந்த் முதல்வராகும் நாளில் ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கும். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார். தாய்மார்கள் இதனை கவனத்தில் வைக்க வேண்டும்.
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, நாட்டை கலவர பூமியாக்குவதை ரஜினி ஒருபோதும் விரும்பமாட்டார். இதுவரை நாம் பார்க்காத புதிய அரசியலை அவர் செய்வார். கல்வி, குடிநீர், விவசாயம், தொழில்கள் என அனைத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கள் பதவிகளை மறந்து பொறுப்புகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படக் கூடியவர்கள். அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் பாடுபடுவார்கள். இதையெல்லாம் சரியாகச் செய்தால் மக்கள் தாங்களாகவே தலைவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார்கள்,” என்றார்.
ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதலில் வேலூர் கேவி குப்பத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இப்போது அண்ணல் அம்பேத்கருக்கு விழா எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.