காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தினால் காவிரி போராட்டத்தின் வீரியம் இழந்து விடும் என வலியுறுத்தி சென்னையில் நேற்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல், போலீசார் மீதும் சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது .
இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.