விஜயகாந்த் புதல்வன் ஷண்முக பாண்டியன் ஜோடியாக மதுரவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளி மீனாட்சி. ஊடகங்கள் இவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியது. இந்த படத்தை தொடர்ந்து தமிழிலிருந்து பலரும் அழைப்பு விடுத்தும் ‘ப்ளஸ் ஒன்’ பரீட்சை எழத வேண்டியிருந்ததால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த இயலவில்லை என்று வருத்தம் இருந்தாலும் ‘நான் ரொம்ப சின்னபொண்ணுங்க,எனக்கு சினிமாவில் சாதிக்க இன்னும் நிறைய டைம் இருக்குதுங்க’ என்று தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் மீனாட்சி .
மேலும் சின்ன வருத்தமும் மீனாட்சிக்கு உள்ளதாம். ‘மதுரவீரன்’ படத்தில் தன் நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்த போதிலும் அதன் பிறகு அவரை தேடி வந்தது எல்லாமே மெட்சூரிட்டியான கிராமீய கதாநாயகி வேடங்கள் தானாம். அதனால் இளமையான மாடர்ன் வேடங்களிலும் நடித்து தனது திறமைய நிரூபிக்க உதவும் ஒரு வேடத்துக்காகவும் காத்திருக்கிறேன் என்கிறார் மீனாட்சி. தன் நடிப்பை இன்னும் மேம்படுத்த விடுமுறை வேளைகளில் நாட்டியம் கற்று வரும் மீனாட்சியின் ஆசை நல்ல நடிகை என்று தமிழ் சினிமாவில் பெயரும் புகழும் பெற வேண்டும் என்பது தான் என்று அழுத்தமாக சுத்தமான தமிழில் சொல்கிறார். மீனாட்சியின் ஆசை நிறைவேற வாழ்த்துவோம்.