Pride of Tamil Nadu Awards 2018

ஆண்கள் வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு மட்டுமே உரியது, பெண்கள் பெரும் வெற்றி இந்த சமுதாயத்துக்கு உரியது. அவர்கள் வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.

ரவுண்ட் டேபிள் இனிஷியேட்டிவ் நடத்தும் கலை, தொழில், பண்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள் வழங்கும் விழா சென்னை ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சாதனையாளர்கள் கலந்து கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.

நிர்வாக துறையில் பெருமைமிகு தமிழர் விருது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு ஷகில் அக்தர் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார். வளரும் சாதனையாளர் விருது அம்பத்தூர் இணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், “நான் பணியில் சேர்ந்த 15 நாட்களிலேயே கும்பகோணம் தீ விபத்து நடந்தது. சுனாமி நேரத்தில் நிறைய இடர்ப்பாடுகளை சந்தித்தோம். அந்தந்த இடங்களில் பணியாற்றிய நிறைய முகம் தெரியாத மனிதர்களுக்கு தான் இந்த விருது சென்று சேர வேண்டும். அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

2018 ஆம் ஆண்டின் பெருமைமிகு தமிழர் கலை, கலாச்சாரம் பிரிவில் விக்கு வினாயக் ராம் அவர்களுக்கு பத்மபூஷன் டிவி கோபாலகிருஷ்ணன் விருதை வழங்கினார். கலை மற்றும் கலாச்சார பிரிவில் வளர்ந்து வரும் கலைஞர் விருது மரப்பாச்சி தமிழ் தியேட்டர் குரூப்பிறகு வழங்கப்பட்டது. மங்கை அவர்கள் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

பொழுதுபோக்கு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் விருதை வழங்கினார்.

மகேந்திரன் அவர்கள் இயக்கிய உதிரிபூக்கள் படத்தை பார்த்து விட்டு சினிமாவை நான் பார்க்கும் கண்ணோட்டமே மாறியது என்று கூறிய பிசி ஸ்ரீராம் அடுத்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக கூறினார்.

நான் அதிகம் மதிக்கும் பிசி ஸ்ரீராம் கையால் இந்த விருதை வாங்கியதில் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.

பொழுதுபோக்கு துறையில் வளரும் கலைஞர் விருதை இயக்குனர் மகேந்திரன் வழங்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். அவர் பேசும்போது, “சென்னையில் பிறந்து வளர்ந்து நிறைய தமிழ் பேசியதாலே சினிமாவில் சாதிக்க நிறைய கஷ்டப்பட்டேன். காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும்போது நிறைய பயத்தோடு தான் நடித்தேன். அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் பேசும் கதாநாயகிகள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். செக்க சிவந்த வானம் படத்தில் நான் முதல் காட்சியில் ஜோதிகா மேடத்தோடு இணைந்து நடித்தேன். முதல் ஷாட் முடிந்தபோது சரியா பண்ணேனா என தெரியவில்லை, மணி சாரிடம் போய் கேட்டேன். அவர் கிரேட்னு சொன்னார். அது என் பெரும் பாக்கியம்” என்றார்.

மருத்துவ சேவை பிரிவில் தைரோகேர் ஆரோக்கியசாமி வேலுமணி அவர்களுக்கு கிவ்ராஜ், டிவிஎஸ் சீனிவாசன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர். காவேரி மருத்துவமனை அரவிந்தன் செல்வராஜ் அவர்களுக்கு மருத்துவ துறையில் வளர்ந்து வரும் சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ஆரோக்கிய சாமி, “37 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டை விட்டு போய் விட்டேன், ஆனால் இன்று சென்னையில் இன்று இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. என் அம்மா, மனைவிக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன். நான் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, தொழில் தொடங்கினேன். இன்று 10 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். குறைந்த விலையில் தைராய்டு மருந்து வழங்கினேன். வட இந்தியர்கள் கிண்டல் செய்தனர். காலரை தூக்கிக் கொண்டு தமிழண்டா என்று சொன்னேன்” என்றார்.

கல்வித்துறையில் பெருமைமிகு தமிழர் விருது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லதா பாண்டியராஜன் அவர்கள் விருதை வழங்கினார். கல்விதுறையில் வளர்ந்து வரும் கல்வியாளர் விருது ஆர்ஏ செபாஸ்டின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நான் கல்விச்சேவை அளித்ததற்காக தமிழர் விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஏழை மாணவர்களுக்கு கல்வி அவசியம். நான் என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன். நீங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் ஐசரி கணேஷ்.

இலக்கிய துறையில் இன்ஸ்பிரேஷன் விருது எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு நடிகர்

பார்த்திபன் மற்றும் ரீமா திவாரி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது உமயவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழன் என்பதே மிகவும் பெருமை. பெண்கள் இந்த காலத்தில் ஜெயிப்பதே கஷ்டம். 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயித்தவர் இவர். ஆண் ஜெயித்தால் அவர் மட்டுமே ஜெயிப்பார், பெண்கள் ஜெயித்தால் தலைமுறையே ஜெயித்த மாதிரி, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றார் பார்த்திபன்.

எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50வது ஆண்டில் இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. நான் எழுத ஒரு கதை என்னை உந்தணும். ஒரு கதை எழுத 8 ஆண்டுகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த விஷயங்களை சமூகத்துக்கு பகிர்ந்து கொள்ள ஆசை. அதனால் தான் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் சிவசங்கரி.

பத்திரிக்கை துறையில் சாதனையாளர் விருது பகவான் சிங் அவர்களுக்கு ரோகித், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் பத்திக்கையாளர் விருது சங்கீதா கந்தவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

42 வருடங்கள் நான் ஊடகதுறையில் பணியாற்றி வருகிறேன். நானும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களும் சுனாமி போல பல வலியான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கையில் நல்ல விஷயங்கள் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள், ஊழல் உட்பட நிறைய தவறான விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறோம். இன்று தமிழ்நாடு மோசமான நிலையில் இருக்கிறது என்றார் விருது பெற்ற பகவான் சிங்.

குறு, சிறு தொழில்முனைவோர் பிரிவில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக் அவர்களுக்கு பெருமை மிகு தமிழர் விருது வழங்கப்பட்டது. தேணாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மிணி இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் தொழில்முனைவோர் விருது பி & பி ஆர்கானிக் ஸ்டோர் பாலாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நான் இந்த நிறுவனத்தை தொடங்கியபோது, பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். 20 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். இந்த விருது எனக்கு கிடைக்க குடும்ப பெண்கள் தான் முக்கிய காரணம் என்றார் பத்மாசிங் ஐசக்.

விருது வழங்கி பேசிய ஹேமா ருக்மிணி, “மெர்சல் அனுபவம் மெர்சலாக இருந்தது. எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். 100 படங்கள் எடுத்திருந்தாலும் மெர்சல் தயாரிப்பாளர்னு தான் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்” என்றார்.

விளையாட்டு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான விருது ஸ்ரீநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இரு வருடங்கள் டென்னிஸ் விளையாடினேன். நானும் ஜோஷ்னா சின்னப்பாவும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றோம். காமன்வெல்த் பயிற்சியில் இருந்ததால் தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி மேட்ச்சை நான் அந்த மேட்ச்சை நான் பார்க்கவில்லை என்றார்.

பொழுதுபோக்கு துறையில் சாதித்த ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பார்த்திபன், கௌஷல் கிஷோர், இந்தர் சிங் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

விருதை வழங்கி பேசிய பார்த்திபன், “40 வருடங்களாக கிழக்கை நோக்கி போகும் ரயிலாக இருப்பது பெரும் சாதனை. நான் சினிமாவில் ஹீரோ ஆவேன் என முதலில் சொன்னதே ராதிகா தான்” என்றார்.

என் தந்தை திராவிட இயக்கத்துக்கே பெரிய தூணாக இருந்தவர். ஆணாதிக்க துறையில் நிலைத்து நிற்பது ரொம்ப கஷ்டம். அதில் நான் 40 ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்னால் மட்டுமே தான். இந்த விருதை நான் அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன் என்றார் ராதிகா.

பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் கலைஞர் விருது ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ஆதி, கடவுளை விட நான் நட்பை மட்டுமே நம்புவேன். மாணவன், தமிழி என இரண்டு தனிப்பாடல்களில் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.

விவசாய துறையில் பெருமை மிகு தமிழர் விருது தெய்வ சிகாமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த விருதை வழங்கினார். விவசாய துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ராஜா மார்த்தாண்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்னும் 4 நாட்களில் தண்ணீர் வருமா? வராதா? என தெரிந்து விடும். பெட்ரோல், மீத்தேன், கெயில் என திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. 400 விவசாயிகள் இறந்தும், குடிக்க நீர் இல்லாமல் இருந்தும் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வீழ்ந்த விவசாயி இனி எழுந்து நிற்கப் போகிறான் என்றார் தெய்வ சிகாமணி.

சில்லறை வணிக துறையில் சாதனையாளர் விருது பூர்வீகா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் சாதனையாளர் விருது கோவை பழமுதிர் நிலையம் கீதா கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடின உழைப்பு தான் இந்த நிலைக்கு எங்களை கொண்டு வந்திருக்கிறது என்றார் கன்னி யுவராஜ்.

உணவு மற்றும் பானங்கள் துறையில் சங்கீதா உணவகத்தின் நிறுவனர் சுரேஷ் அவர்களுக்கு நீதா ரவி அவர்கள் விருது வழங்கினார். உணவு துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ஒன் பாட் ஒன் ஷாட் சீதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சமூக அமைப்புக்கான பெருமை மிகு தமிழன் விருது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நடிகர் பார்த்திபன் இந்த விருதை வழங்கினர். வளர்ந்து வரும் அமைப்புக்கான விருது சட்ட பஞ்சாயத்து அமைப்புக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதீப் ஜான், “டிசம்பர் 2 என் திருமண நாள். வெதர் ரிப்போர்ட்டால் பல நேரங்களில் எங்கள் திருமண நாளை நாங்கள் மறந்திருக்கிறோம். வேலை கிடைக்காமல் அலைந்த நேரங்களில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிடித்த விஷயத்தை செய்ததில் மகிழ்ச்சி. நிறைய மிரட்டல்கள் வந்திருக்கின்றன. மக்கள் ஆதரவு இருக்கும் போது எதற்கு பயப்பட வேண்டும்” என்றார்.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக விஷயங்களை செய்து வருகிறோம். 32 மாவட்டங்களிலும் எங்கள் அமைப்பு இயங்கி வருகிறது. சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்றனர் சட்ட பஞ்சாயத்து அமைப்பினர்.

ஸ்டார்ட் அப் துறையில் பெருமை மிகு தமிழன் விருது ஜோஷ்வா மதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் சாதனையாளர் விருது வகில் சர்வீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிர்வாகி, “இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு. 55 ஆண்டுகளாக 3500 வகுப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இந்த விருதுக்காக அடிப்படை அமைப்பில் இருந்து திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம். 360 பேரில் இருந்து 30000 ஓட்டுகள், 6 ஜூரிக்கள் தேர்ந்தெடுத்த இந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கியதில் பெருமை அடைகிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அபினேஷ் சேகர் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. விழாவில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் கௌஷல் கிஷோர், இந்தர் சிங், அங்கிட் குப்தா, அரவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.

Previous articleடாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி
Next articleDirector Vasanth Top Ten Movies Analysis By Jackesekar