இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 225 ஆண்டுகளைத் தொடப்போகிறது. இந்தக் கல்லூரியின் 93ஆவது ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக கல்லூரிப் பண் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் துணைப் பேராசிரியர் மதன் கார்க்கியின் “முடிவிலி என்றே நீளுவோம், காலம் வென்றே வாழுவோம், பொறியியல் என்னும் புரவியில் ஏறி புவியைச் செயலால் ஆளுவோம்” என்று தொடங்கும் பாடல் வரிகளை டூபாடூ இசை நிறுவனம் மூலமாக சில தனியிசைக் கலைஞர்களிடம் கொடுத்து ஐந்து பாடல்களாக உருவாக்கி அப்பாடல்களுள் மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இசையமைத்தவர் தனியிசைக் கலைஞர் ஜெரார்ட் ஃபீலிக்ஸ். சத்யபிரகாஷ் மற்றும் ஜெரார்ட் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சரவன் கிருஷ்ணன் மற்றும் ஹர்ஷினி காணொளியாக உருவாக்கியுள்ளார்கள்.
கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் டி.கே.பாலாஜி(தலைவர், லூகாஸ் டிவிஎஸ்) மற்றும் அருண் பரத்(வருமான வரித்துறை ஆணையாளர்) முன்னிலையில் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், கூடுதல் பதிவாளர் திரு செல்லதுரை மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் டி.வி.கீதா அவர்களின் உறுதுணையோடு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. டூபாடூவின் தளத்திலும், யூடியூபிலும் இந்தப் பாடல் கிடைக்கும்.
ஐந்து பாடல்கள் உருவாக்கி அதை மாணவர்களே தேர்ந்தெடுத்த வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் பண் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது. கல்லூரியில் மாணவர்கள் மகிழ்ந்து கற்கும் காட்சிகளும், பழமையான கட்டடங்களும் இந்தப் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.