தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர் சத்யராஜ். அவர் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இந்த படத்தை ‘கள்ளப்படம்’ புகழ் வேல் இயக்கவுள்ளார்.
இது குறித்து இயக்குனர் வேல் பேசுகையில் , ”பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். சத்யராஜ் சார் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடனே எனது பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமான நடிகர் யாரும் இல்லை. ஒரு FM ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நாச்சுரல் திரில்லர் தான் இந்த படம். ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட இரவில் நடக்கும் அசாதாரண சம்பவங்களே இந்த படத்தின் மைய கருவாகும். கதையில் தத்திரூபத்திற்காக ஒரு நிஜ FM ஸ்டேஷனிலேயே இப்படத்தை படமாக்கவுள்ளோம். இந்த படத்தின் கதையும் அணுகுமுறையும், நல்ல திகில் படத்தை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும். சத்யராஜ் சார் நடிப்பில் இந்த கதையை நான் படமாக்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி”
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஒரு புது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இவர்கள் இந்த படத்தை சிறப்பாக்கி மேலும் வலுவாக்குவதில் முனைப்போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.